அம்மியைத்தானா, மலையையேகூட நகர்த்தலாமே! பழனி கடைசியில் கையெழுத்திட்டுவிட்டான். அன்று பகலுக்குள் புதிய மாணவன் பழனி மாணவர் தலைவனுக்குப் போட்டியிடுவது பரவிவிட்டது. குருசாமியும் பிறரும் பழனிக்காகப் பிரசாரம் செய்தனர். பழனி இதைப் பற்றிக் கவலைப்படாதவன் போலத் தன் வேலைகளைக் கவனித்து வந்தான். மொத்தம் நான்கு பேர் போட்டியிட்டனர். குருசாமியின் வேண்டுகோளால் இருவர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். முடிவாகப் போட்டியிட்டது ஒன்பதாம் வகுப்பு மாணவன் பழனியும் பத்தாம் வகுப்பு மாணவன் நாவுக்கரசும்தான். நாவுக்கரசு செல்வாக்கு உள்ளவன். தனக்கு ஆதரவு தேட அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டான். குருசாமியோ தன் நண்பர்களுடன் சேர்ந்து காகிதத்தில் கையால் எழுதிய அறிக்கைகளைத் தயார் செய்தான். நாவுக்கரசு அதே பள்ளியில் படிப்பவன், முன்னரே துணை மாணவர் தலைவனாக இருந்தவன், சாரணர் தலைவன் என்ற தகுதிகளையும் பெற்றிருந்தான். அவனே தனக்கு ஆதரவு தேடி மாணவர்களிடம் பேசினான். தேர்தலுக்கு முன்னாள். இறைவழிபாட்டுக் கூட்டத்தில் போட்டியிடுகின்றவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் ஐந்தைந்து நிமிடம் பேச அனுமதி கொடுத்தனர். முதலில் நாவுக்கரசு பேசினான். பேச்சின் இடையில், “ஓட்டலுக்கு முன்பு நின்று பிச்சையெடுத்து நம் பள்ளிக்கே அவமானம் தேடித் தருகிற ஒரு புதுமுகத்திற்கா நீங்கள் ஆதரவு தரப்போகிறீர்கள்” என்று கேட்டுவைத்தான். பழனி அடுத்துப் பேசினான். அன்றுதான் அவன் முதல் முதலாகத் தேர்தலுக்காகப் பேசினான். பேச்சில் நாவுக்கரசு தன்னைப் பற்றிச் சொன்னவற்றிற்குப் பதில் தரவில்லை. மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றால் என்ன என்ன வேலைகள் அவன் செய்ய போகிறான் என்பதை |