எடுத்துச் சொன்னான். அவன் பேச்சு, கச்சிதமாக இருந்தது. நல்ல தமிழிலே சுவையாகப் பேசினான். “பழனி இவ்வளவு நல்ல பேச்சாளானா?” என்று ஆசிரியர்களே வியந்தனர். மறுநாள் தேர்தல் நடந்தது. அன்று மாலை ஓட்டுகளை எண்ணினர். ஓட்டு எண்ணும் இடத்திற்கும் குருசாமிதான் போனான். பழனி வழக்கமாக உட்காரும் மரத்தடியில் அமர்ந்திருந்தான். எண்ணிக்கை முடிந்தது. வெற்றி பழனிக்குத்தான். அதுவும் யாரும் எதிர்பாராத வகையில் மிக அதிக அளவு ஓட்டு வாங்கி வெற்றி பெற்றான். மாணவர்கள் பழனியை அப்படியே தோளில் தூக்கிக்கொண்டு ஆரவாரம் செய்தனர். பழனியின் கண்களில் நீர் துளிர்த்தது. அது ஆனந்தக் கண்ணீர்! புதிய ஊர், புதிய பள்ளி, புதிய மாணவர்கள். அவர்கள் மத்தியில் அவன் மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறான். சுந்தரேசர் மகன் என்பதற்காக அவனுக்கு அதிக ஓட்டு கிடைத்தது என்று யாரேனும் சொல்ல முடியுமா? அவன் உள்ளம் மகிழ்ச்சியால் கனத்தது. “இது சுந்தரேசரின் மகன் பெற்ற வெற்றி அல்ல; பழனி பெற்ற வெற்றி” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பழனி மாணவர்களின் பிடியிலிருந்து விடுபட்டு நாவுக்கரசிடம் ஓடினான். “உன்னிடம் போட்டியிட நேர்ந்ததற்காக வருந்துகிறேன். என் கடமைகளைச் செய்ய நீயும் உதவ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று உள்ளன்போடு சொன்னான். தோல்வியைத் தாங்காது துடித்துக்கொண்டிருந்த நாவுக்கரசு பழனியின் பண்பை உணரவில்லை. பழனிக்குப் பதில் சொல்லாமல், அவன் நீட்டிய கரத்தை ஒதுக்கிவிட்டுப் போய்விட்டான். அதுதான் பழனிக்குத் துன்பம் தந்தது. தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியர்களும் பழனியைப் பாராட்டினர். பழனி குருசாமிக்கும் அவனுடன் உழைத்த |