10 “காளி, பள்ளியில் என்னை மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே அறைக்குள் சென்றான் பழனி. பழனி சொல்வதைக் கேட்கும் முன்னரே காளியின் முகத்தில் களிப்புத் துள்ளிக் கொண்டிருந்தது. அவன் பழனி சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. “பழனி, உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வைத்திருக்கிறேன். அது என்ன தெரியுமா?” என்று புதிர் போட்டான். “மகிழ்ச்சியான செய்தியா? அது என்னவாக இருக்கும்?” பழனிக்குப் புரியவில்லை. “காளி நீயே சொல்லேன். இன்னொரு மகிழ்ச்சியான செய்தி என்ன?” என்று ஆவலோடு கேட்டான். காளி மாடத்திலிருந்த ஒரு பத்திரிகையை எடுத்துக் கொடுத்தான். அது ‘மல்லிகை’ வார இதழ். அதைக் கண்டதும் பழனி ஆவலோடு வாங்கி அவசர, அவசரமாகப் பிரித்தான். திடீரென்று, “காளி! காளி! என் கதை வந்திருக்கிறது. காளி, நான் எழுத்தாளனாகி விட்டேன்” என்று உரக்கச் சொன்னான். |