பக்கம் எண் :

110காளித்தம்பியின் கதை

     அனுப்பியிருக்கிறோம். பெற்றுக் கொண்டமைக்கு எழுதவும்.

         நீங்கள் அனுப்பிய பிற கதைகளும் பாடல்களும் எங்களிடம்
     இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து பிரசுரிப்போம் என்பதையும்
     மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் இன்னும் நிறைய
     எழுதி அனுப்புங்கள். குழந்தை இலக்கியம் உங்களால் புகழ்
     பெறட்டும்.


                                              அன்புள்ள,

                                          மல்லிகை அண்ணன்

     கடிதத்தைப் படித்த பழனி மகிழ்ச்சிக் கடலில் நீந்த முடியாமல் மூழ்கிப்
போனான். தமிழ்நாட்டில் வெளிவரும் சிறுவர் பத்திரிகைகளில் மிகச் சிறந்தது
‘மல்லிகை’ வார இதழ். அதில் ஒரு கதை வெளிவந்தாலே பெரும்புகழ்.
அப்படிப்பட்ட பத்திரிகையில் கதை வெளி வந்துள்ளது. பாராட்டுக் கடிதம்
வந்திருக்கிறது. ஐம்பது ரூபாய் பரிசும் கிடைத்திருக்கிறது. இத்தனை
மகிழ்ச்சியையும் பழனியின் இளம் உள்ளம் எப்படித் தாங்கிக் கொள்ளும்?


     மே மாதம் கதை அனுப்பினான். ஜு லையில் அது வெளி வந்துவிட்டது.
அது மட்டுமா? இன்னும் பல வெளிவரப் போகின்றன. “அத்தோடு நாமும்
நிறைய எழுத வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பிக்கொண்டேயிருக்க
வேண்டும்” என்று முடிவு செய்தான் பழனி.


     பழனி கடிதத்தைக் காளியிடம் கொடுத்தான். காளி, தானே
எழுத்தாளனானதைப் போல, தனக்கே அந்தக் கடிதம் வந்தததைப் போல
மகிழ்ந்தான்.


     “பழனி உன்னைப் பாராட்டுகிறேன். மல்லிகை அண்ணன்
எழுதியிருப்பதைப் போல நீ புகழ்பெற்ற எழுத்தாளனாக வேண்டும். அதோடு
எப்போதும் என்னை மறக்காமலிருக்க வேண்டும்” என்றான் காளி.