“காளி, அப்படிச் சொல்லாதே; நான் எந்தப் புகழை அடைந்தாலும் சரி, எவ்வளவு பெரிய செல்வத்தைப் பெற்றாலும் சரி, உன்னை மறக்கமாட்டேன். நீ செய்த உதவிகளை மறக்கமாட்டேன். காளி, என் பெயரைப் பார்த்தாயா? ‘காளித்தம்பி’. ஆம் நான் என்றும் காளித்தம்பியாகவே இருப்பேன். அரசர் ஒருவர் ‘என்னை மறந்து விடுவீரோ’ என்று ஒரு புலவரைக் கேட்டாராம். அதற்குப் புலவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? ‘என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என் நெஞ்சத்தைத் திறப்பவர்கள் அங்கே உன்னைக் காண்பார்கள்” என்றான் பழனி. இதைச் சொல்லும்போதே அவன் கண்களில் நீர் துளித்தது. காளி பிறந்ததன் பயனை முழுவதும் அடைந்து விட்டவனைப் போல ஆனந்தம் அடைந்தான். “பழனி, மல்லிகை ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுது” என்றான் காளி. “இப்போதே எழுதுகிறேன் காளி, இது செக்காக இருக்கிறதே. எப்படி மாற்றுவது? உங்க முதலாளியிடம் கொடுத்து, அவர் கணக்கில் போட்டு மாற்றித்தரச் சொல்கிறாயா?” என்று கேட்டான். “ஓ....அப்படியே செய்கிறேன். எங்கள் முதலாளி உனக்கென்றால், எதுவும் செய்வார். நான் அவரிடம் நான்கு வருடங்களாக வேலை செய்கிறேன். ஆனாலும் அவருக்கு உன் மேல் ரொம்பப் பிரியம். உம். எல்லாம் உன் முகராசி” என்று சொல்லிச் சிரித்தான் காளி. மறுநாள் பழனி பள்ளிக்கூடம் போனான். அன்று அவன் மாணவர் தலைவன் பதவியை ஏற்றுக்கொள்ளும் நாள். இறைவழிபாடு முடிந்தது. அதற்கு முன்னிருந்த மாணவர் தலைவன் பழனி நின்றிருந்த இடத்திற்குச் சென்றான். அவனை அழைத்துக்கொண்டு தலைமையாசிரியர் இருக்கும் |