பொறாமைக்காரர்களும் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் என்ற உண்மை பாவம், பழனிக்குத் தெரியாது. ஓட்டலருகே சைக்கிள் துடைப்பதை விட்டுவிடலாம் என்று நினைத்தான். அதன் மூலம் மாதம் ஒரு கணிசமான தொகை கிடைக்கிறதே. அந்தப் பணம் இல்லையென்றால் என்ன செய்வது? அதனால் பல்லைக் கடித்துக்கொண்டு நாவுக்கரசின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டான். வழக்கமாகக் காலையில் காளி எழுந்து பழனியை எழுப்பிவிடுவான். அன்று பழனி தானே விழித்துக் கொண்டான். அருகே காளி படுத்துக்கொண்டிருந்தான். “பொழுது நன்றாக விடிந்துவிட்டதே, காளி இன்னும் தண்ணீர் அடிக்கும் வேலைக்குப் போகவில்லையே” என்று நினைத்துக்கொண்டே காளியை எழுப்புவதற்காக அவனைத் தொட்டான். நெருப்பைத் தொட்டதைப்போல உடனே தன் கையை எடுத்துக்கொண்டான். காளியின் உடம்பு உண்மையில் நெருப்பாகத்தான் கொதித்துக் கொண்டிருந்தது. “காளி...காளி என்று அழைத்தான் பழனி. காளி கண்களைத் திறந்தான். பழனி காளியின் நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்தான். அவனுக்குக் கடும் காய்ச்சல். |