“காளி, என்ன உடம்பு இப்படிச் சுடுகிறதே” என்று கேட்டான். காளி இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? காய்ச்சல் ஏன் வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. இரவு படுக்கும்போது உடம்பெல்லாம் வலிப்பதுபோல் இருந்தது. இரவில் விழித்துப் பார்த்தபோது உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது. “பழனி நான் பம்ப் அடிக்கும் வீடு தெரியுமே - அங்கே போய் இன்று என்னால் வேலைக்கு வரமுடியவில்லை என்று சொல்லிவிட்டு வா” என்றான் காளி. பழனி காளி சொன்னபடி செய்தான். அதற்குள் மணி ஏழு இருக்கும். ஒரு ரிக்ஷா அழைத்து அதில் காளியை ஏற்றிக்கொண்டான். திருவொற்றீஸ்வரர் பள்ளியைச் சார்ந்த இலவச மருத்துவமனை ஒன்று பள்ளியை அடுத்து இருந்தது. அங்கே அழைத்துச் சென்றான். டாக்டர், “இது வெறும் காய்ச்சல்தான். விரைவில் குணமாகும்” என்று சொன்னபோது பழனி ஓரளவு தைரியமடைந்தான். டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிக்கொண்டு, காளியுடன் வீட்டுக்குத் திரும்பினான். காளிக்கு மருந்து கொடுத்தான். மருந்து சாப்பிட்டதும் காளி, “பழனி, காலையில் பல வீடுகளுக்குப் பத்திரிகைகள் போடவேண்டும். இன்று வெள்ளிக்கிழமை. வார இதழ்களையும் இன்றே போட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வெளியே வாங்கி விடுவார்கள். பிறகு முதலாளிக்கு நஷ்டம் வரும். முதலாளியைக் கேட்டு அவற்றை அந்தந்த வீடுகளில் கொடுத்துவிட்டு வருகிறாயா?” என்று கேட்டான். “அதற்கென்ன, இப்போதே போய் அந்த வேலையைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் பழனி. “பழனி, உனக்கு எவ்வளவு சிரமம் கொடுக்கிறேன்” என்றான் காளி. “இதெல்லாம் சிரமமா? அப்படிப் பார்த்தால் நான் உனக்கு எவ்வளவு சிரமம் கொடுத்திருக்கிறேன். காளி உனக்கு இந்த உதவிகள் செய்யும்போது என் மனம் திருப்தி |