பக்கம் எண் :

சிறுவர் நாவல்119

     “திருநிலை...கணக்கு அப்படி ஒன்றும் பொல்லாத பாடம் அல்ல.
உனக்கு ஏனோ அதன்மீது ஒரு வெறுப்பு? அந்த வெறுப்போடு
கணக்குப்போடுவதால்தான் தப்பு வருகிறது” என்றான் பழனி.


     “கணக்கை விருப்பமாகக்கூடப் போட முடியுமா? அப்பப்பா; அதை
நினைத்தாலே எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா?” என்றாள் திருநிலை.


     “திருநிலை, கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக்கொள். ஆறுமுறை
போட்டாலும் ஆறு விடை வந்தது என்று சொன்னாயே, அது எந்தக் கணக்கு
என்று சொல்கிறாயா?” என்று கேட்டான்.


     “பயிற்சி பத்து. முதல் கணக்கு. எங்கள் டீச்சர் பத்தாம் பயிற்சியில்
இருக்கிற முதல் மூன்று கணக்கைப் போட்டுவரச் சொன்னாங்க, உன்னால்
அந்தக் கணக்கைப் போட முடியுமா என்று பாரேன்” என்றாள் திருநிலை.


     பழனி புத்தகத்தைப் பார்த்தான். பிறகு, “திருநிலை, இந்தக் கணக்கை
நான் போடுவேன், இது அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லையே” என்றான்.


     திருநிலைநாயகியின் அழகு முகம் மலர்ந்தது. “இந்தக் கணக்கைப்
போடுவாயா? இதோ, இந்தக் காகிதத்தில் அந்த மூன்று கணக்கையும்
போட்டுக் கொடு. அதை அப்படியே நோட்டில் எழுதி எடுத்துக் கொண்டு
போய் டீச்சரிடம் காட்டிவிடுகிறேன். உம்...உம்...அப்பா வெளியே
போயிருக்கிறார். வருவதற்குள் போட்டுக்கொடு” என்று அவசரப்படுத்தினாள்
திருநிலை.


     “திருநிலை, நான் கணக்குப் போட்டுக்கொடுத்தால், அதைக் காப்பி
எடுத்துக்கொள்வது தப்பு. வேண்டுமாானல் அதை எப்படிப் போடுவது என்று
சொல்லித் தருகிறேன். என்ன சொல்லித்தரட்டுமா?”