“சொல்லித்தருகிறாயா? சொல்லும்போது புரிவதைப் போல இருக்கும். அப்புறம் போட வராது. அது தான் என் குணம்” என்று முகம் சுளித்தாள் திருநிலை. “உன்னிடம் உனக்கே நம்பிக்கையில்லாமல் இருப்பது தவறு. திருநிலை. இப்படி வா, நான் சொல்வதைக் கவனி” என்று சொல்லி பழனி புத்தகத்தை எதிரே இருந்த வட்ட மேஜையில் விரித்து வைத்தான். திருநிலை தந்த காகிதத்தை எடுத்துக்கொண்டான். இவையெல்லாம் பார்த்த திருநிலை பென்சில் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். பழனி முதல் கணக்கை எப்படிப் போடவேண்டும் என்று சொல்லிவிட்டு அதைப் போட்டுக் காட்டினான். கணக்கைப் போடும்போது ஒவ்வொன்றையும் திருநிலைக்கு விளக்கினான். திருநிலைக்கே ஒரு ஆச்சரியம். அவளுக்கு அந்தக் கணக்குப் புரிவதுபோல் இருந்தது. பழனி கணக்கைப் போட்டு முடித்து விடையை எழுதினான். உடனே திருநிலை புத்தகத்தின் கடைசிப் பகுதியைப் புரட்டினாள். அங்கே விடைகள் இருந்தன. பழனி போட்ட விடை சரியாக இருந்தது. பழனி இரண்டாவது கணக்கைத் திருநிலையைப் போடச் சொன்னான். திருநிலை தயங்கித் தயங்கிப் போட்டாள். சந்தேகம் வந்தபோது பழனி உதவி செய்தான். இரண்டாவது கணக்கு முடிந்தது. திருநிலை விடையைப் பார்த்தாள். சரியாக இருந்தது. மூன்றாவது கணக்கை அவளே போட ஆரம்பித்தாள். ஓரிடத்தில் என்ன செய்வதென்று புரியவில்லை. பழனியைக் கேட்டாள். பழனியோ, “நீயே கொஞ்சம் அமைதியாக யோசித்துப்பார். என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்” என்று சொல்லிவிட்டான். திருநிலை தானே யோசித்தாள். கணக்கை மேற்கொண்டு போட்டு முடித்தாள். முடித்ததும் மிக வேகமாக ‘விடைகள்’ பகுதியைப் புரட்டிப் பார்த்தாள். அவள் கண்களையே நம்பமுடியவில்லை. அவளே போட்ட கணக்குச் சரியாக இருந்தது. |