பக்கம் எண் :

சிறுவர் நாவல்121

உடனே துள்ளிக் குதித்தாள். “பழனி, என் கணக்கு ரைட். என் கணக்கு
ரைட்” என்று மகிழ்ச்சியால் கத்தினாள்.


     பழனி புன்னகை செய்தான். திருநிலை, “மீதி கணக்கையும்
போடட்டுமா?” என்று கேட்டாள். ஆசிரியைப் போட்டுவரச் சொன்னது
மூன்று கணக்குத்தான். ஆனால் திருநிலை மேலும் போட விரும்பினாள்.


     “போட்டுப்பார் திருநிலை. உன்னால் போட முடியும். ஆனால்
தப்பித்தவறி, சரியான விடை வரவில்லையென்றால், முன்போல் புத்தகத்தையும்
நோட்டையும்....” என்று சொல்லி நிறுத்தினான் பழனி.


     திருநிலைக்கு ஒரே வெட்கம்! “இல்லை, இனிமேல் அப்படி வீசி
யெறியமாட்டேன். விடை சரியாகவில்லை என்றால் திரும்பவும் அமைதியாகப்
போட்டுப் பார்க்கிறேன். அப்போதும் வரவில்லையென்றால் உன்னைக்
கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்.” என்றாள்.


     பழனி வீட்டுக்குப் போனான்.


     சற்று நேரம் கழித்து, தலைமை ஆசிரியர் தியாகராஜர் தன் வீட்டுக்குத்
திரும்பிவந்தார். அறையில் திருநிலை மிகக்கண்ணும் கருத்துமாகக் கணக்குப்
போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தார்.


     “என்னம்மா திரு, உனக்கு எப்போது இந்த வேப்பங்காய் இனிக்கத்
தொடங்கியது” என்று கேட்டார். திருநிலை கணக்கை வேப்பங்காய் -
பாகற்காய் என்று திட்டுவாள் அதைத்தான் அவர் குறிப்பிட்டார்.


     “அப்பா, அப்பா, கணக்கு அப்படி ஒன்றும் கஷ்டமில்லைப்பா, இந்தக்
கணக்கெல்லாம் நானே போட்டேன்!” என்று உற்சாகத்தோடு சொன்னாள்.


     தியாகராஜர் தன் காதுகளையே நம்பவில்லை. திருநிலை அவரிடம்
பழனி வந்தது. புத்தகத்தைத் தான் எறிந்தது. அவன் கணக்குக்
கற்றுக்கொடுத்தது எல்லாவற்றையும் சொன்னாள்.