“தம்பீ, என்னை இழிவாகப் பேசியதைக்கூட நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால் உன்னைப்பற்றி என்ன வார்த்தை பேசிவிட்டான்! அதை என்னால் பொறுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட துஷ்டர்களுக்குத் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன்னைப் போல நல்லவர்களின் உள்ளத்தைப் புண்படுத்திக்கொண்டேயிருப்பார்கள். உம்.... இன்று உன்னால் இந்தப் பயல் தப்பி விட்டான். தம்பீ, இவன் சொன்ன இழி சொல்லை எண்ணிக் கவலையடையாதே. மீனாட்சியருளால் நீ நீடித்த ஆயுளும் நிலைத்த புகழும் பெறுவாய்” என்றார் துறவி. பிறகு, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “பழனி” “பழனி, பழனி.....அழகான பெயர். நான் வருகிறேன் பழனி” என்று கூறிவிட்டு, துறவி படிகளில் ஏறிக் குளத்தை விட்டுச் சென்றார். பழனி துறவிசென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு நாகனைப் பார்த்தான். படியோடு படியாய் ஒட்டிக் கொண்டிருந்த நாகன் மெல்ல எழுந்தான். பழனியைப் பார்க்கவே கூசியவனைப்போல அந்த இடத்தை விட்டுச் சென்றான். அவனுடன் நண்பர்களும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். பழனி படியில் உட்கார்ந்தான். அவன் மனம் நாகனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது. அழகனும் அவன் அருகே உட்கார்ந்தான். பழனி அந்த இடத்தை விட்டு எழுவதாகத் தெரியவில்லை. அதனால் அழகன் “பழனி, நேரமாகிறது போகலாமா” என்று அழைத்தான். சிந்தனையிலிருந்து விடுபட்டான் பழனி. படியிலிருந்து எழுந்தான் அவனும் அழகனும் குளத்தில் கைகால்களைக் கழுவிக் கொண்டனர். கோவிலுக்குள் சென்றனர். மீனாட்சி அம்மையை வணங்கிய போது பழனி, “தாயே, நான் யாரையும் பகைவனாக நினைப்பதில்லை. என்னை மற்றவர்கள் பகைவனாகக் கருதாத நிலையை எனக்குத் தந்தருள்” என்று வேண்டிக்கொண்டான். |