பக்கம் எண் :

சிறுவர் நாவல்123

வந்த தீபாவளிமலரில் அவன் கதை வந்தது. அதற்கு நூறு ரூபாய் சன்மானம்
கிடைத்தது. அந்தப் பணம் மாமல்லபுரம் பார்ப்பதற்காக என்று அப்போதே
தனியாக எடுத்து வைத்திருந்தான் பழனி.


     பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடந்து முடிந்தது. விடுமுறையில் ஒரு
நாள் பழனி காளியுடன் மாமல்லபுரத்துக்குச் சென்றான். அன்று ஒருநாள்
மட்டும் காளியும் பழனியும் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் விடுமுறை
பெற்றுக்கொண்டனர்.


     மாமல்லபுரத்தின் சிற்பங்களை இருவரும் பார்த்து மகிழ்ந்தனர்.
மாமல்லபுரக் கடற்கரையில் ஒரு கோவில் இருக்கிறதல்லவா? அதற்கு நேரே
கடல் அலைமோதும் பாறையில் காளியும் பழனியும் உட்கார்ந்து
பல்லவர்களின் கலைச் செல்வத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.


     பழனி கடற்கரைக் கோயிலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக்
கோயிலின் வழியாகப் பலர் இறங்கிவந்து கொண்டிருந்தனர். அவர்களைப்
பார்த்த பழனி திடுக்கிட்டான். அவர்களுள் சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியின்
தலைமை ஆசிரியரும் இருந்தார். அவர் மற்றவர்களுடன் பழனி இருந்த
பாறையை நோக்கி வந்தார்.


     பழனி தரையில் இட்ட மீன்போல் தவித்தான். தலைமை ஆசிரியர்
கண்ணில் பட அவனுக்கு விருப்பம் இல்லை. அங்கிருந்து உடனே ஓடி
மறையவும் முடியாது. தலைமை ஆசிரியர் அவனை மிகவும் நெருங்கி
விட்டார்.

     “கடவுளே, திடீரென்று மாயமாய் மறைந்துவிடும் மந்திர சக்தியை
எனக்குக் கொடுக்கக்கூடாதா?” என்று தவித்தான். அவனுக்கு அந்த
மந்திரசக்தி இல்லாததால், அவன் அதே இடத்தில் நின்றான். அதுவரை
எங்கோ பார்த்தவாறு வந்த தலைமை ஆசிரியர் பழனியைப் பார்த்துவிட்டார்.
அவர் வியந்தார். பழனி துடித்தான்.