பக்கம் எண் :

126காளித்தம்பியின் கதை

நிறைவேற்ற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேட்டான்.

     இந்தக் கேள்வியைப் பழனி ஏன் கேட்கிறான் என்பது
சங்கரலிங்கத்துக்குப் புரியவில்லை. என்றாலும் “பழனி, ஒவ்வொருவனுக்கும்
ஏதாவது ஒரு இலட்சியம் இருக்கத்தான் வேண்டும். அதை நிறைவேற்றவே
ஒவ்வொருவனும் முயல வேண்டும். இதை நான் எப்போதும்
ஒப்புக்கொள்வேன்” என்றார்.


     “அப்படியானால் தயவுசெய்து என்னை இங்கே பார்த்ததை யாரிடமும்
சொல்லாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டான் பழனி.


     “ஏன் பழனி? எதற்காக இப்படிச் சொல்கிறாய்? நீ இங்கே இருப்பது
உன் அப்பாவுக்குத் தெரியாதா? நீ இங்கே என்ன செய்கிறாய்? உன்னுடன்
உட்கார்ந்திருந்த பையன் யார்?” என்று பல கேள்விகளை ஒரே மூச்சில்
கேட்டுத்தீர்த்தார் சங்கரலிங்கம்.


     “சார், நான் பெற்றோரின் அனுமதியுடன் வந்தேன். ஆனால் நான்
இங்கே இருப்பது அவர்களுக்குத் தெரியாது. எனக்கு ஒரு இலட்சியம்
இருக்கிறது. அதை நிறைவேற்றவே இங்கிருக்கிறேன். என்னுடன் இருப்பவன்
என் நண்பன். சார், என் லட்சியம் என்ன, அதை எப்படி நிறைவேற்றப்
போகிறேன் என்ற விஷயங்களைத் தயவுசெய்து கேட்காதீர்கள். என்னைப்
பார்த்ததைத் தயவுசெய்து யாரிடமும் சொல்லவேண்டாம் சார்” என்றான்
பழனி.


     பழனி சொன்னவை யாவும் சங்கரலிங்கத்திற்குப் புதிர்களாகத்
தோன்றின. அவர் பழனியை வற்புறுத்துவதில் பயன் இருக்காது என்பதைப்
புரிந்து கொண்டார். “சரி பழனி உன்னைப் பார்த்ததை நான் யாரிடமும்
கூறமாட்டேன். இது நிச்சயம்” என்றார்.


     “நன்றி சார். நான் வருகிறேன். வணக்கம்” என்று கூறி, வணங்கிவிட்டு
பழனி, காளியிடம் திரும்பிச் சென்றான். “காளி