நாம் போகலாமா?” என்று கேட்டான். காளி உடனே எழுந்தான். இருவரும் கடற்கரையை விட்டு வெளியேறினார். தான் தலைமை ஆசிரியரிடம் பேசியதைப்பற்றிக் காளி கேட்பான் என்று எதிர்பார்த்தான் பழனி. பழனியும் சங்கரலிங்கமும் என்ன பேசினார்கள் என்பது காளிக்குத் தெரியாது. ஆனாலும் அதைப்பற்றி காளி ஒன்றுமே கேட்டுக் கொள்ளவில்லை. பழனியும் காளியும் அன்றே சென்னைக்கு வந்தனர். ‘மல்லிகை’ இதழ் ஒரு தொடர்கதைப் போட்டி வைத்திருந்தது. பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய். பழனி அதில் கலந்துகொள்ள விரும்பினான். காளி அவனை ஊக்கினான். அந்த விடுமுறையில் பழனி தொடர்கதை எழுதி அனுப்பும் வேலையில் ஈடுபட்டான். விடுமுறை முடிந்தது. ஜனவரி முதல் வாரத்தில் பள்ளி திறந்தார்கள். இன்னும் மூன்று மாதங்கள். பிறகு தேர்வு வரும். அதில் முதல் மார்க்கு எடுக்கவேண்டும் அல்லவா? பழனி முன்பு படித்ததைவிட மிக அக்கறையோடு ஆழ்ந்து படிக்கலானான். பிப்ரவரி மாதம் வந்தது. அன்று வெள்ளிக்கிழமை. மாலை, பள்ளி முடிந்ததும் பழனி வீட்டுக்குப் போகத் தன் சைக்கிளை எடுத்தான். அப்போது செல்வமணி பழனியைத் தேடிவந்தான். இந்தச் செல்வமணி யார் தெரியுமா? இவனும் பழனி படிக்கும் அதே வகுப்பில் படிப்பவன் தான். இவன் பெயரில் செல்வம் இருந்தது. ஆனால் வீட்டில் செல்வம் இல்லை. ஏழையிலும் பரம ஏழை. ஒருநாள் பகல் பழனி சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது செல்வமணி அவனைத் தேடி வந்தான். “பழனி, சமூக அறிவியல் வினாவிடை தயார் செய்து வைத்திருந்தாயே அதைத் தருகிறாயா? நான் எழுதிக்கொண்டு தருகிறேன்” என்று கேட்டான் செல்வமணி. |