உடனே பழனி சைக்கிளின் பின்னால் கட்டியிருந்து புத்தகக் கட்டை அவிழ்த்தான். போஸ்டர் பேப்பரில் தைத்திருந்த ஒரு நோட்டை எடுத்துச் செல்வமணியிடம் கொடுத்தான். செல்வமணி அதை எடுத்துக் கொண்டு அருகே இருந்த மரத்தடியில் போய் அமர்ந்தான். பழனி சைக்கிளில் சாப்பிடச் சென்றான். ஒன்றே முக்கால் மணிக்குப் பழனி திரும்பவும் பள்ளிக்கு வந்தான். சைக்கிளை நிறுத்தும்போதே செல்வமணி மரத்தடியில் இன்னும் எழுதிக்கொண்டிருப்பதைக் கண்டான். பழனி சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றான். செல்வமணி அப்போது தான் எழுதி முடித்தான். பழனியிடம் அவனுடைய நோட்டை நன்றியுடன் திருப்பிக் கொடுத்தான். நோட்டைப் பெற்றுக்கொண்டான் பழனி. பிறகு “செல்வமணி எல்லாம் எழுதிக்கொண்டாயா?” என்று கேட்டான். “இல்லை. முதல் ஐந்து பாடத்தில் வினாவிடை எழுதிக்கொண்டேன். இன்னும் இரண்டு பாடங்களுக்கு எழுதவேண்டும். நாளைக்கு எழுதிக்கொள்கிறேன்” என்று சொன்னான் செல்வமணி. “ஆமாம் நீ சாப்பிட்டயா?” என்று கேட்டான் பழனி. உடனே செல்வமணி அவசர அவரசமாக “ஓ சாப்பிட்டேனே! நீ போன உடனே நான் சாப்பிட்டு விட்டேன்.” என்றான். பழனி செல்வமணியை உற்றுப்பார்த்தான். அவன் முகத்தில் சாப்பிட்ட களை இருப்பதாகத் தோன்றவில்லை. மாறாகப் பசியின் சோர்வு அவனிடத்தில் இருந்தது. பழனி தன் நோட்டை ஒருமுறை புரட்டிப் பார்த்தான். பிறகு “செல்வமணி நீ பொய் சொல்கிறாய். ஐந்து பாடங்கள் மொத்தம் இருபது பக்கங்கள். இதை எழுதவே குறைந்தது முக்கால்மணி நேரம் பிடிக்கும். அப்படியிருக்க நீ சாப்பிடுவதற்கு ஏது நேரம். செல்வமணி எனக்காக ஒரு வேலை செய்கிறாயா?” “ஓ உனக்காக எந்த வேலை வேண்டுமானாலும் செய்கிறேன்” என்றான் செல்வமணி. |