என்பது நூற்றுக்கு நூறு உண்மையல்லவா? செல்வமணியின் வாழ்க்கை அவன் உள்ளத்தை உருக்கியது. “பகலில் வீட்டுக்குப் போனால் சாப்பிடும் சாப்பாட்டை, நான் சாயந்திரம் போய்ச் சாப்பிட்டுக் கொள்வேன். எனக்கு இது பழக்கமாகிவிட்டது. அதனால் நீ வருந்தாதே” என்றான் செல்வமணி. “செல்வமணி, என்னிடம் சைக்கிள் இருக்கிறது. பகலில் இது எனக்கு தேவையில்லை. நான் சாப்பிடும் இடத்துக்கு நடந்துபோனால் கூட ஐந்து நிமிஷத்துக்கு மேல் ஆகாது. அதனால் இனிமேல் தினமும் என் சைக்கிளை எடுத்துக் கொண்டு போ. சாப்பிட்டுவிட்டுச் சைக்கிளில் வந்து விடு. பசியோடு படித்தே நல்ல மார்க்கு வாங்குகிறாய். பசியில்லாமல் படித்தால் இன்னும் நிறைய மார்க்கு வாங்குவாய்” என்றான் பழனி. அன்று முதல் செல்வமணி, பகல் மணி அடித்ததும் பழனியின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போவான். வீட்டில் சாதமோ, பிற வீடுகளில் கிடைத்த இட்லி தோசையோ இருக்கும். அதைச் சாப்பிட்டு விட்டுத் தெம்போடு திரும்புவான். அந்தச் செல்வமணிதான் அன்று மாலை பழனி வீட்டுக்குப் போகும்போது அவனிடம் வந்தான். “என்ன செல்வமணி வீட்டுக்குப் போகவில்லையா?” என்று கேட்டான். “வீட்டுக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பழனி, எங்க பெரியம்மா திருவொற்றியூரில் இருக்காங்க. அவங்களுக்கு எங்கம்மா ஏதோ பணம் தரவேண்டுமாம். அதை என்னை எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்குமாறு சொன்னாங்க. நாளைக்குச் சனிக்கிழமைதானே. அதனால் நாளைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன். பஸ்ஸில் போனால் நிறையச் செலவாகும். முடியுமானால் உன் சைக்கிளைக் கொடு. அதை மாலை நாலுமணிக்குள் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து விடுகிறேன்” என்றான் செல்வமணி. |