“நாளைக்குக் காலையில் வா. சைக்கிளைத் தருகிறேன். ஆனால் நாலு மணிக்குள் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும்” என்று சொன்னான் பழனி. செல்வமணி மகிழ்ச்சியோடு வீட்டுக்குப் போனான். பழனி அன்று மாலை ஏஜென்ஸிக்குச் சென்றான். அன்று பேப்பர் வரக் கொஞ்சம் நேரமாகி விட்டது. அதனால் சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து பழனி புறப்படும் போதே மணி ஏழு இருக்கும். வெகு வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்றான் பழனி. சூளை வந்ததும் மடமடவென்று கடைகளுக்குப் பத்திரிகை விநியோகம் செய்துகொண்டே வந்தான். அங்காளம்மன் கோயில் தெருவில் ஒரு கடைமுன் சைக்கிளை நிறுத்தினான். பத்திரிகையைக் கடையில் கொடுக்க வேண்டும். பத்திரிகைக் கடையில் கொஞ்சம் கூட்டம் இருந்தது. அதனால் கடைக்காரன் சற்று தாமதித்துப் பத்திரிகையைப் பெற்றுக்கொண்டு, பணத்தைக் கொடுத்தான். பழனி அதை வாங்கிக் கொண்டு திரும்பினான். அவனுக்குப் ‘பகீர்’ என்றது. கடைக்கு முன்னே நிற்கவைத்திருந்த சைக்கிளைக் காணோம். அதில் மற்ற கடைகளுக்குப் போட வேண்டிய பேப்பரும் இருந்தது. பழனி என்ன செய்வான்? ஒவ்வொரு கடையிலும் சைக்கிளைப் பூட்டிவைத்துப் பிறகு திறப்பதால் வேலை தாமதமாகும். அதனால் அவன் கடை முன் சைக்கிளை வைக்கும் போது அதைப் பூட்டுவதில்லை. ஆனால் இப்படி நேரும் என்று பழனி நினைக்கவேயில்லை. அருகே இருந்தவர்களைக் கேட்டான். அவர்கள் செய்தித்தாளில் இருந்த காரசாரமான செய்திகளில் மூழ்கி இருந்தார்களே தவிர சைக்கிளைக் கவனிக்கவில்லை. போலீசில் புகார் செய்யலாம் என்று பழனி கிளம்பினான். செல்வமணி மறுநாள் சைக்கிள் கேட்டது நினைவுக்கு வந்தது. அவனுக்குச் சைக்கிள் தரமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான். இன்னொரு சைக்கிள் வாங்குவது என்பது எளிதல்லவே. அதையும் நினைத்தான். இத்தகைய நினைவுகளுடன் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிச் சென்றான். |