கேட்டிருந்தார். பழனி தன் படத்தை அனுப்ப விரும்பவில்லை. பழனிதான் காளித்தம்பி என்பது இப்போது பள்ளி வரை தெரியும். படம் வந்தால் மதுரையிலும் தெரியுமல்லவா? அதனால் “தற்போது படம் கைவசம் இல்லை. விரைவில் படம் எடுத்து அனுப்புகிறேன்” என்று மல்லிகை ஆசிரியருக்குக் கடிதம் எழுதினான். படம் உண்மையில் கையில் இல்லை. ஆனால் படம் எடுக்க முயற்சி செய்யாமல் இருந்தான். அது மார்ச் மாதம் கடைசித் திங்கட்கிழமை. அன்றுதான் ஆண்டுத் தேர்வு ஆரம்பம். விடியற்காலையில் பழனியை எழுப்பிவிட்டுப் போனான் காளி. பழனி படித்துக்கொண்டிருந்தான். மணி சுமார் ஆறரை இருக்கும். அப்போது அவன் அறைமுன் யாரோ நிற்பது தெரிந்தது. பழனி எழுந்து பார்த்தான். இரு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். “இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?” என்ற வியப்போடு அவர்களைப் பார்த்தான். போலீஸ்காரர்களில் ஒருவர் “தம்பி உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “பழனி! ஏன் கேட்கிறீர்கள்” “பழனியா? பொய் சொல்லாமல் சொல்லு. நீ மதுரையிலிருந்து வந்தவன்தானே?” பழனி சற்றுத் தயங்கினான். “உம் சொல்லு” போலீஸ்காரர் அவசரப்படுத்தினார். “ஆமாம். நான் மதுரையிலிருந்து தான் வந்தேன்”. என்றான் பழனி. “சரி நட ஸ்டேஷனுக்கு” என்று அதிகாரக் குரலில் சொன்னார் போலீஸ்காரர். “போலீஸ் ஸ்டேஷனுக்கா? எதற்கு?” பழனி கேட்டான். இதுவரை பேசாமல் இருந்த மற்றொரு போலீஸ்காரர் “எதுக்கா? விருந்து வைக்கிறதுக்கு. திருட்டு நாயே! எப்பேர்ப்பட்ட திருட்டைச் செய்துட்டு எதுக்குன்னா கேக்கறே? நட ஸ்டேஷனுக்கு” என்றார். |