“திருட்டா? நானா?” பழனி இன்னும் எதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் “எங்கிட்டே ஒன்னும் கதை அளக்காதே, எல்லாம் இன்ஸ்பெக்டரிடம் சொல்லு! இப்ப மரியாதையா எங்கக்கூட வா” என்றார் போலீஸ்காரர். பழனி அறையை மூடிவிட்டு அவர்களுடன் சென்றான். அன்றைக்குத்தான் தேர்வு. அன்றுதானா இப்படி ஒரு பழி வரவேண்டும்? “வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதை மாதிரி நடந்துவிட்டதே! தேர்வு எழுதவில்லை என்றால் முதல் மார்க் எப்படி வாங்குவது? போலீஸ்காரர்கள் எப்போது விடுவார்களோ என்று பயந்தவாறு பேலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான். மணி பத்து. பள்ளி மணி கணகணவென்று ஒலித்தது. மாணவர்களின் சப்தம் பெருகி பிறகு ஓய்ந்தது. ஆசிரியர் வினாத்தாளைக் கொடுத்துக் கொண்டே வந்தார். அவர் பழனி தேர்வுக்கு வராததைக் கவனித்து வியந்தார். தேர்வு நடக்கும் அறைகளைச் சுற்றி வந்த தலைமை ஆசிரியரும் பழனி வராததைக் கண்டு வியந்தார். அதே நேரத்தில் பழனி போலீஸ் ஸ்டேஷனில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது. |