பக்கம் எண் :

136

                               12

     தேர்வு ஆரம்பமாகும் அன்று காலையில் நாவுக்கரசு தன் தந்தை
வாங்கிக்கொண்டு வந்த செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தான். உலகச்
செய்தி எதுவும் அவன் உள்ளத்தைக் கவரவில்லை. கடைசிப் பக்கத்திலிருந்த
செய்திகளைப் பார்த்தான்.


     “கடந்த மே மாதம் மதுரையில் ஒரு பணக்கார வீட்டில் திருடிய
சிறுவன் ரங்கன் இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. அவன் சென்னையில்
இருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. போலீசார் அவனைப் பிடிக்கத் தீவிர
முயற்சி செய்து வருகின்றனர்.”


     இதுதான் செய்தி. நாவுக்கரசு இதையே இரண்டு மூன்று முறை
படித்தான். “மதுரையில் திருடிய சிறுவன் - கடந்த மே மாதம் திருடிய
சிறுவன் - சென்னையில் இருக்கிறான்” என்று முணுமுணுத்தான். அவன் மனம்
பழனியை நினைத்தது. பழனி மதுரையைச் சார்ந்தவன் என்று அவனே
சொல்லியிருக்கிறான். அவன் கோடை விடுமுறையில்தான் சென்னைக்கு
வந்ததாகவும் சொல்லியிருக்கிறான். இவற்றையும் நினைத்தான் நாவுக்கரசு.