பக்கம் எண் :

சிறுவர் நாவல்139

     “இல்லை....இல்லை....மதுரையில் நான் வேலையே செய்யவில்லை.”

     “அப்படியா? சரி...மதுரையில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
எங்கே தங்கியிருந்தாய்? உன் தந்தையின் பெயர் என்ன? தாயின் பெயர்
என்ன?”


     இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பழனி திகைத்தான் அவன் திருடனா?
இல்லை! அவன் பெயர் ரங்கனா? அதுவுமில்லை. இதை நிரூபிக்கத் தன்
தந்தையின் பெயரையும் அவர் முகவரியையும் அவன் சொல்லலாம். ‘பாசு’
என்று அழைக்கப்படும் பா. சுந்தரேசர் -பாசு ஆலையின் உரிமையாளர் என்
தந்தை எனச் சொன்னால் ஹெட்கான்ஸ்டபிள் என்ன, இன்ஸ்பெக்டரே கூட
அதிர்ச்சி அடைவார். “வேண்டுமானால் டிரங்காலில் கூப்பிட்டுப்
பேசுங்களேன்” என்றும்கூட அவன் சொல்லலாம். பாசுவின் மகன் என்பது
தெரிந்ததும் அவனுக்கு ராஜ மரியாதை கிடைக்குமே!


     ஆனால் பழனி செய்தது என்ன?


     தந்தையின் புகழைக் காட்டித் தான் வெளியே வர விரும்பவில்லை.
தந்தைக்கு இந்த நிலையில் தான் இருப்பது தெரியவும் கூடாது. அதனால்
அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நின்றான்.


     “ஏன் பேசாமல் நிற்கிறாய்? உண்மை வெளிப்பட்டு விட்டதே என்ற
பயத்தால்தானே? திருட்டுப்பயலே, எங்கே நீ திருடிய நகைகள்?


     ஹெட்கான்ஸ்டபிள் கேட்டார்.


     “ஐயா, நான் ரங்கன் இல்லை. நான் எங்கும் எதையும் திருடியதில்லை.
என்னை விரைவில் வீட்டுக்கு அனுப்புங்கள்” என்று சொன்னான்.


     “வீட்டுக்கா? இரு இரு! நல்ல கம்பிபோட்ட கதவு இருக்கும் வீட்டுக்கே
அனுப்பி வைக்கிறேன். அதுவரை இங்கேயே இரு” என்று சொல்லி பழனியை
அதே அறையில் இருக்கச் செய்தார்.