பக்கம் எண் :

14காளித்தம்பியின் கதை

அனுபவித்திருக்கிறேன். என் தந்தையின் புகழ்முன் என் திறமை
மங்கிவிடுகிறது. அதனால் மற்றவர்கள் நான் அப்பாவால் புகழ் பெறுகிறேன்
என்று நினைக்கிறார்கள்”.


     பழனி பேசி முடிக்கவில்லை. அழகன் குறிக்கிட்டான். “இவ்வளவுதானா?
இன்னும் சொல்லவேண்டியது இருக்கிறதா? பள்ளிக்கூடத்தில் நீ நிறைய
மார்க்கு வாங்குவதற்கு உன் அப்பாதான் காரணம் என்று நாகன்
சொல்வதைக்கூட ஒப்புக்கொள்வாய் போலிருக்கிறதே” என்றான்.


     உடனே பழனி, “அதை ஒப்புக்கொள்வதில் தப்பு இருப்பதாக
நினைக்கவில்லை. அழகா, உனக்குச் சென்ற மாதம் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி
நினைவிருக்கிறதா? தமிழாசிரியர் முன்னாள் நடந்த செய்யுளில் கேள்வி
கேட்டார். சிலர் சொல்லவில்லை. அவர்களையெல்லாம் “மக்கு-மண்டு” என்று
திட்டினார். பிறகு நாகனைக் கேட்டார். அவனும் பதில் சொல்லாமல் நின்றான்.
‘மரம் போல் நிற்கிறாயே; உம் மரமாவது பொய்சொல்லாது. உனக்கு
அதுதானே பிழைப்பு’ என்று வைதார். பிறகு என்னைக் கேட்டார். வழக்கமாக
முன்னாள் நடந்த பாடத்தை நன்றாகப் படித்துவிட்டே வகுப்புக்கு வருபவன்
நான். ஆனால் அன்று ஏதோ வேலையின் காரணமாகப் படிக்கவில்லை என்று
சொன்னேன். அதற்கு ஆசிரியர் என்ன சொன்னார் என்று
நினைவிருக்கிறதா?” என்று கேட்டான்.


     “இவ்வளவையும் சொன்ன நீயே அதையும் சொல்லிவிடு” எனச்
சொன்னான் அழகன்.


     “சொல்கிறேன். அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆசிரியர்
என்ன சொன்னார் தெரியுமா? ‘நேற்று படிக்க வில்லையா பழனி; பரவாயில்லை
உட்கார். உன் அறிவு எனக்குத் தெரியாதா?’ என்று சொன்னார். நான்
உட்கார்ந்தேன். எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த நாகன், ‘பாசுவின்
மகனைப் பார்த்தாயா? படித்தாலும் அவனை ஆசிரியர் புகழ்கிறார். படிக்கா
விட்டாலும் அவனை ஆசிரியர் புகழ்கிறார்’ என்று மெல்லச் சொன்னான்.
அதையும் கேட்டேன்.....”