பழனி சற்று நிறுத்தினான். “அதனால் ஆசிரியர் நீ பணக்காரனின் மகன் என்பதற்காக உன்னைப் புகழ்ந்தார் என்கிறாயா? நீ பணக்காரனின் மகன் என்பதற்காகத்தான் உனக்கு அதிக மார்க்குத் தருகிறார்கள் என்றும் சொல்கிறாயா?” என்று கோபத்துடன் கேட்டான் அழகன். பழனியே “அப்படியே சொன்னாலும் தப்பில்லை பதில் சொல்லவில்லை என்றால் என்னையும் மற்றவர்களைப் போல ஆசிரியர் திட்டுவதுதானே? ஏன் திட்டவில்லை? ஆசிரியர் கண்ணுக்கு நான் வெறும் பழனியல்ல; பாசுவின் மகன் பழனி! அதே காரணத்திற்காக எனக்குக் கொஞ்சம் அதிக மார்க்கும் தரலாம் இல்லையா?” என்று கேட்டான். “பழனி போதும் நிறுத்து. எவனோ ஏதோ உளறினால் நீ ஆசிரியர்களையே சந்தேகிக்கும் அளவு வந்துவிட்டாயே. நாகன் சொல்வதைக்கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். நீ சொன்னதை எப்படிப் பொறுப்பது? வழக்கமாக நன்றாகப் பதில் சொல்லும் மாணவன் ஒரு நாள் பதில் சொல்லவில்லை என்றால் எந்த ஆசிரியரும் திட்டமாட்டார். வழக்கமாக நல்ல மார்க்கு எடுப்பவன், ஒரு பரீட்சைக்கு வரவில்லை என்றால்கூட அவனைப் பாசாக்குகிறார்களே, அதைப் போல நாகன் சொன்ன விஷ வார்த்தைகளை மனத்தில் கொண்டு விபரீத எண்ணங்களை வளர்த்துக்கொள்ளாதே. பழனி உன் திறமையை நீ ஒப்புக்கொள்ளாமலிருக்கலாம். ஆனால் நானும் என்னைப்போன்ற பலரும் அதை மதிக்கிறோம்” என்று அழகன் சொன்னான். பழனி அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. இருவரும் நடந்தனர். அழகன் தன் வீட்டுக்குச் சென்றான். பழனி நடந்தே தன் வீட்டிற்குப் போனான். மதுரையில் உள்ள சொக்கி குளத்தைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பணக்காரர்கள் பலர் குடியிருக்கும் பெருமை பெற்றது சொக்கிகுளம். அங்கேதான் சுந்தரேசரின் மாபெரும் மாளிகை இருந்தது. மாளிகைக்கு முன்னும் பின்னும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் |