சேதி தெரியும் சம்பவம் நடந்த அன்று நான் லீவ். அது பேப்பரில் கூட வந்திருந்ததே” என்றார். இன்ஸ்பெக்டர் உடனே ஸ்டேஷனில் இருந்த பேப்பர் பைலைக் கொண்டு வரச்சொல்லிப் புரட்டினார். அதில் பழனி பணப்பையைக் கண்டுபிடித்த செய்தி இருந்தது. இன்ஸ்பெக்டர் அதைப் பார்த்துவிட்டு திருப்தி அடைந்தார். “தம்பீ...நீ சொன்ன செய்தி இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். பழனியும் இன்ஸ்பெக்டர் தன்னை விட்டுவிடுவார் என்று மகிழ்ந்தான். அதற்குள் ஹெட்கான்ஸ்டபிள் அந்தப் பத்திரிகையைப் புரட்டினார். உடனே, சார், இதைப் பாருங்கள்” என்று சொன்னார். இன்ஸ்பெக்டர் பார்த்தார். அங்கே ஒரு பையனின் படம் இருந்தது. கீழே அவன்தான் பணப்பையைக் கண்டுபிடித்த பழனி என்று எழுதியிருந்தது. இன்ஸ்பெக்டர் படத்தையும் பழனியையும் மாறிமாறிப் பார்த்தார். படத்தில் இருக்கும் பையன் அல்ல எதிரே இருப்பவன் என்பது புரிந்தது. பழனி இதைக் கவனித்தான். காளியின் படத்தையல்லவா பழனியின் படம் என்று பிரசுரித்திருந்தார்கள்? அப்போது பழனிக்கு நன்மை புரிந்த படம் இப்போது தீமை புரிந்தது. “தம்பீ, இது உன் படம் அல்லவே! நீ தான் பழனி என்று சொன்னால் எப்படி நம்புவது? நீ யார் என்பது தெரியும்வரை இங்கே இருக்கவேண்டும்” என்றார். பழனி கலங்கினான். அவன் எப்படித் தேர்வு எழுதுவது? ஸ்டேஷனில் இருந்த கடிகாரம் பத்துமணி என்பதைக் காட்ட மணியடித்தது. பழனி கடிகாரத்தைப் பார்த்தான். அவன் கண்கள் நீரைச் சொரிந்தன. ஒவ்வொரு மணியோசையும் அவன் இதயத்தில் சம்மட்டியால் அடிக்கும் ஓசையாக வேதனை தந்தது. “என் இலட்சியம் போனது! தேர்வு இனிமேல் எழுத முடியாது! ஒரு வருடம் வீண்! என் இலட்சியம் பாழ்” என்று எண்ணிய பழனி குமுறி அழுதான். |