“தம்பீ, ஏன் அழுகிறாய்? உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம். நீ ரங்கன் இல்லை என்பது தெரிந்ததும் விட்டுவிடுவோம். அழாதே” என்று ஆறுதல் சொன்னார் இன்ஸ்பெக்டர். பழனி அழுகைக் குரலிலேயே, “இன்ஸ்பெக்டர் சார், மணி பத்து. இந்நேரம் எங்கள் பள்ளியில் தேர்வு தொடங்கியிருக்குமே. நீங்கள் விட்ட பிறகு எப்படி சார் நான் தேர்வு எழுத முடியும்? ஒரு வருஷம் படிப்பு வீணாகுமே” என்று கேட்டான். இன்ஸ்பெக்டர் திகைத்தார். “தம்பீ, நீ படிக்கிற பையனா? எங்கே படிக்கிறாய்?” பழனி தன் பள்ளியின் பெயரைச் சொன்னான். “இதை நீ முதலிலேயே சொல்லக்கூடாதா? தேர்வு எழுதவேண்டிய உன்னை இங்கே தடுத்து நிறுத்துவோமா? உம். புறப்படு. போய் தேர்வு எழுது. எழுதி முடித்த பிறகு வந்தால் போதும். உடனே போ” என்ற இன்ஸ்பெக்டர், “பத்து மணிக்குத் தேர்வு என்றால் நீ நடந்து போவதற்கு நேரமாகுமே. ஹெட்கான்ஸ்டபிள் நம் ஜீப்பில் இவனை அழைத்துக் கொண்டு போய்ப் பள்ளியில் விட்டுவிட்டு வா” என்றார். ஹெட்கான்ஸ்டபிள் தயங்கினார். “சார் ஒருவேளை இவனே ரங்கனாயிருந்து, தப்பி ஓடிவிட்டால்....” என்று இழுத்தார். “எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொன்னதை உடனே செய்” என்று போலீஸ் குரலில் உத்தரவிட்டார் இன்ஸ்பெக்டர். ஹெட்கான்ஸ்டபிள் அடங்கி ஓடினார். பழனி இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் செய்தான். “நன்றி சார். இந்த உதவியை மறக்கவே மாட்டேன் தேர்வு ஒரு மணி வரையில். தேர்வு முடிந்ததும் நான் நேரே இங்கே வருகிறேன் சார்” என்றான். |