பக்கம் எண் :

சிறுவர் நாவல்145

     “சரியாகத் தெரியாது சார். தேர்வு முடிந்ததும் நான் ஸ்டேஷனுக்கு
வருவதாகச் சொன்னேன். என்னை அழைத்துப் போவதற்காக வந்திருப்பார்
சார்” என்றான் பழனி.


     “இல்லை பழனி...நான் அதற்காக வரவில்லை. உன்னிடம் மன்னிப்புக்
கேட்பதற்காக வந்தேன்” என்றார் இன்ஸ்பெக்டர்.


     இன்ஸ்பெக்டர் சொன்னது பழனிக்குப் புரியவில்லை. “இன்ஸ்பெக்டர்
என்னிடம் மன்னிப்புக் கேட்பதா?” என்று அவன் வியந்தான்.


     “பழனி, நீ ரங்கன் இல்லையென்பது நிச்சயமாகி விட்டது. நீ
பழனியேதான் என்பதை உங்கள் தலைமை ஆசிரியரிடமிருந்து
தெரிந்துகொண்டேன். பழனி, உண்மையான திருட்டுப்பயல் ரங்கனை
செங்கல்பட்டில் நேற்றிரவே கைது செய்துவிட்டார்கள் என்ற செய்தி பதினொரு
மணிக்குத்தான் கிடைத்தது. அந்த ரங்கனிடமிருந்து சில நகைகளைக்
கைப்பற்றியுள்ளனர். அவனுக்கு உதவி செய்த வேறொரு ஆளையும்
அவனுடன் கைது செய்துவிட்டனர். யாரோ தந்த பொய்யான செய்தியால்
உன்னைத் தொந்தரவு செய்துவிட்டோம். அதுவும் தேர்வு எழுதவேண்டிய
நாளில் இப்படி நடந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்றார்
இன்ஸ்பெக்டர்.


     பழனி தன் சுமையெல்லாம் இறங்கிவிட்டதைப் போல இன்பமடைந்தான்.
இனிமேல் நடக்கும் தேர்வுகளை நன்றாக எழுதலாமல்லவா?


     பழனி, “சார், சமயத்தில் என்னை அனுப்பித் தேர்வு எழுத உதவி
செய்தீர்கள். அந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்” என்றான்.


     “பழனி, பொய்த்தகவலைச் சொன்ன குரல் சிறுவன் குரல்போல் பட்டது.
உன்னைப் பிடிக்காதவர்கள் யாராவது இப்படிச் செய்திருக்கலாம். உனக்கு யார்
மீதாவது சந்தேகம் இருக்கிறதா?”