முடிகிறது. பள்ளியும் முடிநது விடுமுறை துவங்குகிறது. அதன்பின் சென்னையில் அவனுக்கு வேலை இல்லை. அவன் மதுரைக்குச் செல்லலாம். பழனி மதுரைக்குச் செல்வதைப் பற்றி யோசித்தான். அதை எப்படிக் காளிக்குச் சொல்வது? அதுதான் புரிய வில்லை. மறுநாள் கடைசித் தேர்வு. அதற்குப் படிப்பதையும் நிறுத்திவிட்டுப் பழனி யோசித்தான். “தன் பிரிவைக் காளி எப்படிப் பொறுத்துக் கொள்வான்? அவனையும் மதுரைக்கே அழைத்துச் செல்லலாமா? அழைத்தால் வருவானா?” யோசனைக்கு முடிவே இல்லை. “போஸ்ட். காளித் தம்பி!” என்ற குரல் கேட்டது. பழனி எழுந்தான். அறைக்கு வெளியே சென்றான். தபால்காரன் நீட்டிய கவரை வாங்கிக் கொண்டு அறைக்குள் வந்தான். கவரைக் கிழித்து, உள்ளே இருந்த கடிதத்தைப் படித்தான். அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. கண்கள் அதிசயத்தால் அகல விரிந்தன. உள்ளம் உவகையால் நிறைந்தது. அவன் அந்தக் கடிதத்தை எல்லையற்ற சந்தோஷத்தோடு மற்றொரு முறையும் படித்தான். அவ்வளவு மகிழ்ச்சியை அவன் இதற்குமுன் அடைந்ததே இல்லை. சென்னையில் காளியின் துணை கிடைத்தபோதும் அத்தகைய மகிழ்ச்சியடையவில்லை. பள்ளியில் சேர்ந்த போதும் அந்த மகிழ்ச்சி அவனிடம் சேரவில்லை. மாணவர் தலைவனாக வெற்றி பெற்ற போதும் அந்த மகிழ்ச்சியில்லை! தொடர்கதைப் போட்டியில் பரிசு பெற்றபோதும் அவ்வளவு மகிழ்ச்சியடையவில்லை. அந்த மகிழ்ச்சியையெல்லாம் கடந்த ஒரு மகிழ்ச்சியை இந்தக் கடிதம் தந்தது. |