பேரன்புள்ள திரு.காளித்தம்பி அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் தங்கள் கதைகளாலும் பாடல்களாலும் குழந்தை இலக்கியத்தில் புரட்சி செய்வதைக் கண்டு மகிழ்ந்தோம். உங்கள் எழுத்தைப் படித்துப் படித்து இன்பம் அடைந்தோம். அண்மையில் நீங்கள் மல்லிகை தொடர் கதைப் போட்டியில் பரிசு பெற்றமை அறிந்து மகிழ்ந்தோம். தொடர்கதையை ஆவலோடு படித்து வருகிறோம். எழுத்தின் மூலம் தங்களை அறிந்த நாங்கள் தங்களை நேரில் காண விரும்புகிறோம். எனவே, வரும் வெள்ளியன்று நடைபெறும் எங்கள் இலக்கிய மன்ற ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுமாறு கோருகிறோம். தாங்கள் எங்கள் வேண்டுகோளைத் தட்டாமல் ஏற்கவேண்டுகிறோம். மதுரைக்கு வந்து செல்வதற்கான செலவுத் தொகையைப் பள்ளி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறது. தங்கள் ஒப்புதலை மறு தபாலில் தெரிவித்து எங்களைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். அன்புள்ள நாகமாணிக்கம், சங்கரலிங்கம், மாணவச் செயலாளர் தலைவர், தலைமை ஆசிரியர் பழனி கடிதத்தைப் படித்து முடித்தான். அந்தக் கடிதம் அவன் படித்த பள்ளியிலிருந்து வந்ததுதான். பழனியின் சிறப்பெல்லாம் தந்தையால் வந்தவை எனத் தூற்றித் திரிந்த நாகமாணிக்கம் பழனிதான் காளித்தம்பி என்பதை அறியாமல் எழுதிய கடிதந்தான் அது. பழனி சொன்னான். |