பக்கம் எண் :

150காளித்தம்பியின் கதை

     “காளி, இது நான் எதிர்பார்க்காத ஒன்று. இந்தச் சுந்தரேசர் பள்ளியின்
மாணவனாகிய என்னைப் பேச அழைக்கிறார்கள். அதுவும், சுந்தரேசர் மகன்
என்பதால் பழனிக்கும் பேரும் புகழும் மார்க்கும் கிடைப்பதாகக் கூறிய
நாகமாணிக்கம் எழுதியிருக்கிறான். என்னை விஷத்தைப் போல,
வியாதியைப்போல வெறுத்த அதே நாகமாணிக்கம் எழுதியிருக்கிறான்.
எனக்கென எந்தத் திறமையும் இல்லைஎன இகழ்ந்த நாகமாணிக்கம்
எழுதியிருக்கிறான்.


     சொல்லிக்கொண்டே வந்த பழனி சட்டென்று நிறுத்தினான். “காளியிடம்
மறைத்த உண்மைகளையல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறோம்” என்று
நினைத்தான்.


     “மன்னிக்கவேண்டும் காளி. உனக்குப் புரியாததைச் சொல்லிக்
கொண்டிருக்கிறேன். காளி, உன்னிடம் நான் யார் என்பதைச் சொல்லவில்லை.
நீ எங்கே அடிக்கடி ‘நான் யார்’ என்பதைக் கேட்டுத் தொல்லைபடுத்துவாயோ
என்று பயந்தேன். ஆனால் நீ மறந்தும் கூட என்னைக் கேட்கவில்லை. நன்றி
காளி நன்றி” என்றான் பழனி.


     காளி அமைதியாக அவன், சொன்னதைக் கேட்டான். பிறகு “பழனி நீ
ஒரு பெரிய பணக்காரனின் மகன் என்பதை உன்னைப் பார்த்ததும் தெரிந்து
கொண்டேன். பண்புள்ளவரின் மகன் என்பதைப் பழகியபோது
தெரிந்துகொண்டேன். இப்போது உன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லத்
துணிந்ததைப் பார்த்தால் நீ என்னை விட்டுப் போகப் போகிறாய்
என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றான்.


     பழனி என்ன சொல்ல முடியும்! காளி எவ்வளவு புத்திசாலி என
வியந்தான்.


     “காளி நீ சொல்வது உண்மைதான். நான் மதுரைக்குப் போகப்
போகிறேன். அதைப்பற்றி உன்னிடம் கூற இருந்தேன். இப்போது கூறும்படி
ஆகிவிட்டது. கடிதம் அனுப்பிய சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியில்தான் நான்
படித்தேன். அந்தப் பள்ளியை ஏற்படுத்தியவரும், பாசு ஆலையின்
உரிமையாளருமான சுந்தரேசர் மகன் நான். நான் வகுப்பில் முதல்