பக்கம் எண் :

152காளித்தம்பியின் கதை

உன்னைப் பிரிவதைத்தவிர வேறு குறை எனக்கில்லை. நான் வாழ்க்கை
முழுவதும் உன்னுடன் தங்குவது சரியல்ல!”


     “காளி, என்னுடன் தங்குவது தங்காதது பற்றிப் பிறகு யோசிக்கலாம்.
குறைந்தது ஒரு வாரம் உன் வேலையில் லீவு எடுத்துக்கொண்டு என்னுடன்
வா. உன்னை என் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தவேண்டும். பிறகு நீ
விரும்பினால் என்னுடன் இரு. இல்லையென்றால் சென்னைக்குத் திரும்பி விடு.
தயவுசெய்து இதை மட்டும் மறுக்காதே”


     பழனி வேண்டிக் கேட்டான். காளி ஒரு வாரம் மதுரையில் தங்க
ஒப்புக்கொண்டான். பழனி உடனே சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளிக்குத்தான்
ஆண்டு நிறைவு விழாவுக்கு வருவதாக ஒப்புக்கெண்டு கடிதம் எழுதினான்.


     மறுநாள் கடைசித்தேர்வு எழுதினான். பிறகு ஊருக்குப் போவதற்கான
ஏற்பாடுகள் செய்தான். பழனி அவன் வேலை செய்த பேப்பர் ஏஜென்ஸியில்
தான் வேலையிலிருந்து நின்றுவிடுவதாகக் கூறிவிட்டான். முதலாளி மிகவும்
வருத்தப்பட்டார். தனது பழைய சைக்கிளை செல்வமணிக்கு அன்பளிப்பாகக்
கொடுத்து விட்டான். தனக்குப் பரிசாகக் கிடைத்த ஆயிரம் ரூபாயைத்
தலைமை ஆசிரியரிடம் கொடுத்தான்.


     “சார் நம் பள்ளியை நிறுவியவரின் படத்தை மாணர்வர்கள் தரும்
பணத்தைக் கொண்டு தயாரித்துப் பள்ளியில் வைக்கவேண்டும் என்று
சொன்னீர்களே இந்தப் பணத்தை அதற்குப் பயன்படுத்துங்கள். நான்
ஊருக்குப் போகிறேன் சார். மேற்கொண்டு மதுரையிலேயே படிக்கப்
போகிறேன். தேர்வு முடிந்ததும் முதல் மார்க்கு யார் வாங்கியது என்பதை
மட்டும் எனக்குத் தெரிவியுங்கள்” என்று சொல்லி அழகனின் முகவரியை
அவரிடம் கொடுத்தான். தலைமை ஆசிரியர் தியாகராஜர் அடைந்த
துன்பத்திற்கு எல்லையே இல்லை. பழனி திருநிலையிடமும் சொல்லிக்
கொண்டான்.


     பிறகு காளி வேலை செய்யும் பத்திரிகைக் கடை முதலாளியிடமும்
அவன் சைக்கிள் துடைத்த ஓட்டல் முதலாளியிடமும் விடை பெற்றுக்
கொண்டான்.