பக்கம் எண் :

சிறுவர் நாவல்153

     சுந்தரேசர் பள்ளியின் மாணவர் இலக்கிய மன்ற ஆண்டு நிறைவு
விழாவுக்கு முன் நாள் பழனி தன்னை ஆதரித்துப் புகழ்கொடுத்த
சென்னைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு காளியுடன் மதுரைக்குப்
புறப்பட்டான்.


     சுந்தரேசர் பள்ளியில் ஒரு வழக்கம் இருந்தது. ஆண்டுத்தேர்வை
முடித்த பிறகு இலக்கிய மன்ற விழாவை நடத்துவார்கள். அதனால் தேர்வு
பயம் இல்லாமல் மாணவர்கள் உற்சாகமாய் விழாவில் கலந்து கொள்வார்கள்.


     அன்று காலையிலிருந்தே மாணவர்கள் பள்ளியை அலங்கரிக்கத்
தொடங்கினர். நேரம் ஆகஆகப் பள்ளியின் அழகு அதிகமாகிக் கொண்டே
இருந்தது. மாலை மணி நான்காயிற்று.


     மாணவர்கள் மாப்பிள்ளைகளைப்போலத் தங்களைச்
சிங்காரித்துக்கொண்டு பள்ளியின் முன்னே இருந்த திறந்த வெளி அரங்கின்
முன் அமர்ந்தனர். நாகமாணிக்கம் இங்கும் அங்கும் ஓடி, இதைச்செய் என்று
கட்டளையிட்டு, தான்தான் இலக்கிய மன்றச் செயலாளன் என்பதை
வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.


     ஆசிரியர்களும் பிற உள்ளுர்ப் பெரிய மனிதர்களும் பெற்றோர்களும்
வந்தனர். பத்திரிகை நிருபர்கள் வந்தனர். ‘காளித்தம்பி’யைக் காண
எல்லோரும் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் காளித்தம்பி மட்டும்
வரவில்லை.


     நாகமாணிக்கம் துடித்தான். காளித்தம்பி வராமல் ஏமாற்றி விடுவாரோ
என்று கலங்கினான். மணி ஐந்தாயிற்று. அதுதான் விழா ஆரம்பமாக
வேண்டிய நேரம். பள்ளி நிர்வாகி சுந்தரேசர் சரியாக அந்த நேரத்தில்
வந்துவிட்டார். தலைமை ஆசிரியர் சங்கரலிங்கம் விழாவைத் தொடங்கினார்.



     அவர் வரவேற்பு உரை நிகழ்த்தினார். நாகமாணிக்கம் மேடை அருகே
நிலை கொள்ளாமல் நின்றான்.


     சங்கரலிங்கம் வரவேற்றார்: