உலகத்தில் அழியாமல் இருக்க விரும்பியவர்கள் தங்கள் புகழை வைத்து விட்டுத் தாங்கள் இறந்து விட்டனராம். இப்படி தொல்காப்பியர் கூறுகிறார். புகழே அழியாத செல்வம். எனவே ஒவ்வொருவரும் புகழ்பெற வேண்டும். ஆனால் அது தன்னுடைய சுய திறமையால் வந்ததாக இருக்கவேண்டும். இவன் மந்திரி மகன், ஆலை முதலாளியின் மகன், கலெக்டர் மகன் என்ற முறையில் கிடைக்கும் புகழ் புகழல்ல; அது இகழ்! அவனே முயன்று புகழ் பெற வேண்டும். அதனால் அவனைப் பெற்றவர்கள் புகழடைய வேண்டும். இவர் யார் தெரியுமா? வகுப்பில் முதல்வனாக வரும் முத்துவின் தந்தை! அவர் யார் தெரியுமா? பேச்சுப் போட்டியில், முதற் பரிசுபெற்ற பரமனின் அப்பா என்று பிறர் சொல்ல வேண்டும். அது அவன் புகழ்; அந்த மகன் புகழ். மாணவ நண்பர்களே, நீங்கள் பெறும் புகழ் தந்தையின் புகழாக இருக்கக்கூடாது. அது மகன் புகழாகவே அமையவேண்டும். எனவே அழியாத செல்வமாம் புகழைப் பெறுங்கள். அதனால் உங்களைப் பெற்றவர்கள் சிறப்படையட்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் புகழ் என்னும் செல்வத்தைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். நாளை நற்புகழ் அடையப்போகும் உங்களுக்கு இன்று முன் கூட்டியே என் தலை வணங்குகிறது” என்று குனிந்து கரம் குவித்து வணங்கித் தன் பேச்சை முடித்தான் பழனி. வையகம் எங்கும் மோதி எதிரொலிக்கக் கூட்டம் கைதட்டியது. பின்னே பேசிய தலைவர் பழனியின் பேச்சைப் புகழ்ந்தார். “பழனி பேசியபோது நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தனே மற்றொரு முறை மதுரைக்கு வந்து விட்டானோ என்ற ஐயம் எழுந்தது” என்று சொன்னார். நன்றி கூறுவது நாகமாணிக்கத்தின் கடமை. குன்றிய உடலோடு நாகன் மேடை ஏறினான். நா எழும்பவில்லை. சிரமப்பட்டு பேசினான். “பழனியை எனக்குப் பிடிக்காது. அவன் என் புகழைக் குறைப்பவன் என்று கருதினேன். அதனால் பழனியின் புகழ் |