சொன்னவர் அத்துடன் நிற்கவில்லை. “தம்பீ, எங்கள் மன்றத்தின் ஆண்டு விழாவில் நீயும் சொற்பொழிவாற்ற வேண்டும். இளமைத் துடிப்பும் புதுமை வேகமும் கொண்ட உனது பேச்சை எங்கள் மன்றத்தினர் கேட்டுப் பயன்பெற வேண்டும்”. மன்றத் தலைவர் இவ்வாறு சொல்லிவிட்டுச் சுந்தரேசரைப் பார்த்தார். அவர் தம் மகனைச் சான்றோன் என்று மன்றத் தலைவர் சொன்னதைக் கேட்ட மகிழ்ச்சியிலே திளைத்திருந்தார். அதையே எதிர்பார்த்த மன்றத்தலைவர் திருப்தி அடைந்தார். பிறகு பழனியைப் பார்த்தார். பழனியின் முகமும் அப்போது மலர்ந்த சொந்தாமரை மலரைப்போல மலர்ந்து, வெட்கத்தால் கொஞ்சம் சிவந்திருக்கும் என்று எதிர்பார்த்தார். என்ன ஏமாற்றம்! பழனியின் முகம் கோபத்தால் கொதித்துக்கொண்டிருந்தது. அவன் கண்கள் மன்றத் தலைவரைச் சுட்டு விடுவதுபோல் நோக்கின. இதைக் கண்டு மன்றத் தலைவர் திகைத்தார். “தவறுதலாக நாம் தகாத வார்த்தை ஏதாவது சொல்லிவிட்டோமோ?” என்று சந்தேகித்தார். பழனி கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான். பிறகு, “ஐயா மன்றத் தலைவரே, உங்கள் ஆண்டு விழாவில் என்னைப் பேசுமாறு அழைத்தீர்கள். நன்றி. முதலில் பழனி நன்றாகப் பேசுவான் என்று சொன்னீர்கள். அதனால் என் பேச்சை இதற்குமுன் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரிதானே?” என்று கேட்டான். மன்றத் தலைவர் சற்றும் தயங்காமல், “ஓ, பலமுறை கேட்டிருக்கிறேனே!” என்று சொன்னார். “மகிழ்ச்சி. எங்கே என் பேச்சைக் கேட்டீர்கள்? தயவு செய்து சொல்கிறீர்களா?” பழனி கேட்டதும் மன்றத் தலைவர் திகைத்தார். பழனி நன்றாகப் பேசுவான் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் ஒருமுறை கூடப் பழனியின் பேச்சைக் கேட்டதில்லை. |