அம்மா இருந்தாள். பழனி, ‘அம்மா’ என்று அழைத்துக் கொண்டே அம்மாவை அணைத்துக் கொண்டான். “அம்மா எனக்கு ஒரு திறமையும் இல்லையாம்மா? எனக்கென்று தனியே புகழ் இல்லையாம்மா? அப்பாவின் பிள்ளை என்பதால் என்னை இந்திரன், சந்திரன், குபேரன் என்று சொல்லும்போதெல்லாம் எனக்குக் கோபம் கோபமாக வருகிறது” என்றான். “பழனி, உன்னை மேலுக்குச் சிலர் புகழ்ந்தால் அது அவர்கள் செய்யும் தவறு. அதற்காக நீ வருத்தப்படாதே. இந்த உலகம் அப்படிப்பட்டது. பணம் இருப்பவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பாராட்டும். அதற்காக உன்னை உண்மையாக யாரும் புகழ்வதில்லை என்று எண்ணாதே” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். சுந்தரேசர் அப்போது உள்ளே வந்தார். மகன் இப்போதெல்லாம் அடிக்கடி பணக்காரன் மகனாகப் பிறந்தோமே என்று வருந்துகிறான் என்பதை அறிந்திருந்தார். அவர்தான் தாயை அனுப்பித் தேற்றச் செய்தார். அவரும் பழனியின் அருகே சென்றார். “பழனி, இன்று நீ ஏன் இவ்வளவு ஆத்திரத்தோடு நடந்துகொண்டாய்? வெளியே சென்ற இடத்தில் ஏதாவது நடந்ததா?” என்று கேட்டார் அப்பா. பழனி கோவிலில் நடந்ததைச் சொன்னான். துறவியின் ஆசிமொழிகளையும், நாகன் பேசியவற்றையும் சொன்னான். “பழனி, துறவியின் வாக்குப் பலிக்கும். நீ நிச்சயம் நிலைத்த புகழையும் நீடித்த ஆயுளையும் பெறுவாய்” என்று முகமும் அகமும் மலரச் சொன்னாள் பழனியின் அம்மா. “ஆமாம் பழனி. துறவிபோன்ற பெரியோர்கள் சொன்னதை எடுத்துக்கொள். பொறாமையோடு பேசிய நாகமாணிக்கத்தின் சொற்களையும், பொருளுக்காகப் பேசிய இளங்கோ இலக்கிய மன்றத் தலைவரின் பேச்சையும் பொருளில்லாத வெறும் சொற்கள் என்று தள்ளி விடு” என்றார் அப்பா. |