பக்கம் எண் :

சிறுவர் நாவல்21

     பழனி அவர் சொன்னதைக் கேட்டு அதன்படி நடக்க முயன்றான்.

     நாட்கள் பறந்தன.


     அன்று ஏப்ரல் மாதம் கடைசிநாள். அன்றுதான் சுந்தரேசர் உயர்நிலைப்
பள்ளியில் ரிசல்ட். சுந்தரேசர் பள்ளியில், யார் யார் தேர்ச்சி பெற்றார்கள்
என்பதுடன், ஒவ்வொரு வகுப்பிலும் யார் முதல் மார்க்கு வாங்கினார்கள்
என்பதையும் அன்று அறிவிப்பார்கள்.


     பழனி தேர்வின் முடிவைப் பார்க்கப் புறப்பட்டான். வெளியே செல்லும்
முன் பூசை அறைக்குச் சென்றான். மீனாட்சியம்மை படத்தின் முன் நின்றான்.
“தாயே, இந்த முறை எனக்கு முதல்மார்க்கு வேண்டாம். முதல் மார்க்கை
நாகமாணிக்கம் பெற அருள் செய்யம்மா” என்று வேண்டினான்.


     விசித்திரமான வேண்டுகோள். அதற்காகவே அவன் தெரிந்த
கேள்விகளுக்கும் பதில் எழுதாமல் விட்டுவிட்டானல்லவா? அதனால்
நாகமாணிக்கம் தான் முதல் மார்க்கு வாங்குவான் என்று நம்பினான் பழனி.


     பழனி வெளியே வந்தான். பள்ளிக்கு எதில் செல்வது? வீட்டில் கார்
இருக்கிறது. ‘டிரைவர்’ என்று அழைத்தால் போதும். கார் முன்னே நிற்கும்.
அவனுடைய ஸ்கூட்டரும் இருந்தது. பழனி அவற்றில் செல்ல விரும்பவில்லை.
பணக்காரரின் மகன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் வெளிப்படுத்த
வேண்டுமா? பழனி சைக்கிளில் ஏறிப் பள்ளிக்குச் சென்றான்.


     பள்ளியை நெருங்கிவிட்டான். அடுத்த தெருவில் சைக்கிளைத்
திருப்பினான். யாரோ ஒருவன் சைக்கிள் மணிச் சத்தத்தைப்
பொருட்படுத்தாமல் சைக்கிளின் எதிரே வந்தான். பழனி பிரேக் போட்டான்.
அப்படியும் சைக்கிள் எதிரே வந்தவனைத் தொட்டு நின்றது.