பக்கம் எண் :

சிறுவர் நாவல்25

     அழகன் அதைப் பொருட்படுத்தவில்லை.

     “உங்கப்பா வைக்கிற பள்ளிக்கூடத்திற்கு லஞ்சப் பள்ளி என்று பெயர்
வைக்கலாம். அப்படி ஒரு பள்ளி வந்தாலும் உனக்கு முதல் மார்க்குக்
கிடைக்குமா என்பது சந்தேகம்தான். உங்கப்பா நிறைய லஞ்சம் தருபவனுக்கு
முதல் மார்க்குத் தரச் சொல்வார். பாவம் உனக்கு அப்போதும்
ஏமாற்றம்தான்,”.


     அழகன் சொன்னான், நாகன் சீறினான்.


     “ஏய் அழகா, மரியாதையா வாயை மூடு. இல்லே...” என்று இழுத்தான்.


     “இல்லை என்றால் என்ன செய்வாய்? என்னிடம் சண்டைக்கு
வருவாயா? வருவதானால் அந்தச் சில்க் ஷர்ட்டைக் கழற்றி வைத்துவிட்டு வா.
பாவம், எந்த லாரிக்காரன் வாங்கிக் கொடுத்ததோ?” என்றான் அழகன்.


     “அழகா, என் பொறுமைக்கும் எல்லையுண்டு. இனி என்னைப் பற்றியோ
எங்கப்பாவைப் பற்றியோ ஒரே ஒரு சொல் சொன்னாலும் நான் சும்மா
இருக்கமாட்டேன்” என்று கர்ஜித்தான் நாகன்.


     அழகன் மீண்டும் சிரித்தான்.


     “நாகா, நீ பழனியைப் பற்றிப் பேசலாம். மற்றவர்கள் மட்டும்
உன்னைப்பற்றியோ உங்கப்பாவைப் பற்றியோ பேசக்கூடாது. அதுவும்
உண்மையைச் சொல்லிவிடக்கூடாது. அப்படித்தானே! மதுரையில்
எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் சுந்தரேசர் பெரிய
பணக்காரர் இல்லையா? வகுப்பில் கெட்டிக்காரர்கள் பலர். அவர்களில்
தலைசிறந்தவன் பழனி. முதல் மார்க்கு ஒருவன்தானே வாங்க முடியும்?
அதைப் பழனி வாங்குகிறான். நீ உன் அப்பாவிடம் உதவி கேட்கும்
லாரிக்காரர்களிடம் ஷர்ட்டும் பேண்டும் சைக்கிளும் பணமும் லஞ்சமும்
வாங்கப் பயன்படுத்தும் நேரத்தையும் படிப்பதற்குப் பயன்படுத்து. அதற்குப்
பின்னே ஒரு வேளை நீயும் முதல் மார்க்கு வாங்கலாம்!” என்று அமைதியாக,
ஆனால் கிண்டலோடு சொன்னான் அழகன்.