பக்கம் எண் :

26காளித்தம்பியின் கதை

     அவ்வளவுதான்! நாகன் “என்ன சொன்னே!” என்று கேட்டுக்கொண்டே
அழகனின் மீது பாய்ந்து அவனை அறைந்தான். அழகன் பயந்துவிடவில்லை.
பாய்ந்து நாகனின் சட்டையைப் பிடித்துக் கொண்டான். கண்மூடித் திறக்கும்
நேரத்தில் ‘தரதர’ வென்று இழுத்துக்கொண்டே பள்ளிக்கு வெளியே வந்தான்.
அதே வேகத்தில் நாகனைக் கீழே தள்ளினான். நாகன் தரையிலே
உருண்டான்.


     “ஏய் நாகப்பாம்பே, பள்ளிக்கு வெளியே சண்டைபோடு. உன் நச்சுப்
பல்லைக் கழட்டி விடுகிறேன். மிருகத்தனம் பெற்ற உனக்குப் பழனி இந்த
முறையில் பதில் சொல்லாததால் நாக்கு நீண்டு விட்டது. உம் எழுந்து வா”
என்றான் பழனி.


     அழகன் நல்ல பலசாலிதான். ஆனால் இவ்வளவு துணிவும் திறமையும்
அவனுக்கு இருக்கும் என்று நாகன் நினைக்கவில்லை. நிலத்திலிருந்து
எழுந்தான். மாணவர் கூட்டம் உள்ளே இருந்து வெளியே வந்து நின்றிருந்தது.
நாகன் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்துக்கொள்ள அழகன் மீது
பாய்ந்தான். இருவரும் கட்டிப் புரண்டனர். அழகனுக்கும் அடிகள் கிடைத்தன.
அழகன் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுத்தான். “அழகனின்
கை....சே....சே அது கையல்ல...... இரும்பு இரும்பு” என்று நாகனின் மனம்
முணுமுணுத்தது. நாகனின் பல் கல்லில் மோதி ரத்தமாகக் கொட்டியது. மேலும்
போரிட அவன் விரும்பவில்லை. நாகன் பரிதாபமாகக் கூடியிருந்த
மாணவர்களைப் பார்த்தான். ‘முட்டாள்கள்! வந்து சண்டையை
விலக்கக்கூடாதோ’ என்று மனத்துக்குள்ளே திட்டினான். பிறகு அழகனைப்
பார்த்தான். அவனுக்கு நெற்றியில் அடி! ரத்தம் கசிந்தது. ஆனாலும் அவன்
தளராமல் நாகனைத் தாக்க மலைபோல நின்றான்.


     நாகன், அழகனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான். அழகன்
கைகளைத் தேய்த்துக்கொண்டு நாகனை நோக்கி ஒரு அடி எடுத்து
வைத்தான். அவ்வளவு தான்! நாகன் திடீரென்று திரும்பி வேறு திசையில்
ஓடினான். பாவம் வேகமாக ஓடக்கூட முடியவில்லை. தள்ளாடித் தள்ளாடி
ஓடினான். மாணவர்கள் உரக்கச் சிரித்தனர். அழகனைப் பாராட்ட வந்தனர்.