பக்கம் எண் :

சிறுவர் நாவல்27

     பழனியை இகழும் போது அதைப் பொறுமையுடன் கேட்டவர்களின்
பாராட்டைப் பெற விரும்பவில்லை அழகன். எவருடனும் பேசாமல் தன்
வீட்டை நோக்கிச் சென்றான். நாகனின் போக்கை நினைத்தவாறு சென்றதால்
எதிரே வந்த பழனியின் சைக்கிளைக் கவனிக்கவில்லை.


     சண்டை போட்டதனால் கிழிந்த சட்டையையும், தரையில் மோதியதால்
நெற்றியில் கசியும் ரத்தத்தையும் பார்த்துதான் பழனி துடித்தான். “என்ன
நடந்தது?” என்று பழனி கேட்டபோதுதான் எதிரே பழனி இருப்பதை
அறிந்தான் அழகன்.


     “பழனி, ஒன்றும் பிரமாதமாக நடந்துவிடவில்லை. எதற்காக நீ இப்படிக்
கலங்குகிறாய்?” என்று சாதாரணமாகக் கேட்டான் அழகன்.


     “நெற்றியிலிருந்து ரத்தம் வடிகிறதே!”


     “ஓ, ரத்தமா!” என்று சொல்லிக்கொண்டே கால் சட்டையிலிருந்த
கைக்குட்டையை எடுத்த அழகன், அதனால் ரத்தத்தைத் துடைத்துக்
கொண்டான்.


     “அழகா, என்ன விஷயம்? யாரிடமாவது சண்டை போட்டாயா?”


     “ஆமாம்! ஆஹா, அந்தக் காட்சியை நீ பார்க்காமல் போய்விட்டாயே
பழனி!”


     “எதை? நீ சண்டை போட்டதையா?”


     “ஆமாம், அந்தச் சண்டையில் நம் நல்லபாம்பு - அதுதான்
நாகமாணிக்கம் அடிபட்டு ஓடிய அழகே அழகு! பழனி, அவன் திரும்பிக்கூடப்
பார்க்காமல் ஓடிவிட்டான்” என்று சொல்லிச் சிரித்தான் அழகன்.


     பழனிக்கு ஒன்றும் புரியவில்லை. “நாகனுடனா நீ சண்டை போட்டாய்?
ஏன்? எதற்காக? அவன் சண்டைக்கெல்லாம் அஞ்சமாட்டானே? அவன்
எப்படி ஓடினான்?” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான்.