“நடந்ததையெல்லாம் சொல்கிறேன். உன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வா. பேசிக்கொண்டே உன் வீட்டுக்குப் போவோம்” என்றான் அழகன். பழனி, அழகனின் கைக்குட்டையை வாங்கி முதலில் அவன் முகத்தை நன்றாகத் துடைத்தான். பிறகு சைக்கிளை எடுத்துக் கொண்டான். அழகன் அருகே வர, தன் வீட்டை நோக்கி நடந்தான். அழகன் அன்று பள்ளியில் நடந்ததைச் சொன்னான். நாகன் பேசிய பேச்சையும், அழகன் சொன்ன பதிலையும் சொன்னான். நாகன் சண்டைக்கு வந்ததும் பின் திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போனதும் சொன்னான். அழகன் சொல்லி முடிக்கவும் பழனியின் வீடு வரவும் சரியாக இருந்தது. இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். பழனியின் அறையில் அமர்ந்தனர். அழகனைப் பழனியின் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். பழனியின் வீடு அவன் வீடு போல! அழகன் தன் உடையைக் கழற்றிவிட்டுப் பழனி கொடுத்த உடையைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான். பழனி வேலைக்காரனை அழைத்து மோர் கொண்டுவரச் சொன்னான். இரு தம்ளரில் மோர் வந்தது. இருவரும் குடித்தனர். “பழனி உனக்கு என் பாராட்டு! இன்று போல என்றும் முதல்வனாக நீ வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்று அழகன் உண்மையான அன்போடு சொன்னான். பழனி பெருமூச்சு விட்டான். “அழகா, நீ சொன்னதை நாகன் கேட்டிருந்தால், பணக்காரனின் மகன் என்பதற்காக நீ என்னைக் காக்காய் பிடிக்கிறாய் என்று சொல்வான். இப்போது கூட யாரிடமாவது பழனி ஆளை வைத்து அடித்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கக்கூடும். யார் கண்டது?” என்றான் பழனி. சற்று நேரம் ஏதோ யோசித்தான். பிறகு “அழகா ஒரு பையனைப் பார்த்து இவன் கலெக்டரின் மகன், மந்திரியின் மகன், மில் சொந்தக்காரரின் மகன் என்று சொல்வது அவனுக்குப் புகழல்ல! அது அவனுடைய தந்தையின் புகழ். |