4 வண்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அது மதுரையைவிட்டு விலக, விலக, வண்டிக்குள் இருந்த பழனியின் மனம் மதுரையோடு போய் ஒட்டிக் கொள்ளத் தொடங்கியது. பழனி மதுரையிலேயே பிறந்தவன். மதுரையிலேயே வளர்ந்தவன். மதுரையில் பிறந்தது ஒரு பேறு என்றும், அங்கே வாழ்வது ஒரு பேறு என்றும் நினைப்பவன். அவன் இனி ஒரு வருடத்திற்கு மதுரையைப் பார்க்கப் போவதில்லை. பழனி திடீரென்று சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். கடைசியாக, பிறந்த ஊரை ஒரு முறை பார்க்க விரும்பினான். மதுரைமா நகரம் கண்ணுக்குச் சரியாகத் தெரியவில்லை என்றாலும் பழனி அந்தத் திசையை நோக்கி உண்மையான பக்தியுடன் வணங்கினான். தன் விருப்பப்படி மதுரையை விட்டு போவது மிகவும் சிரமம் என்று முதலில் பழனி நினைத்தான். அப்பாவும் அம்மாவும் எளிதில் சம்மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தான். ஆனால் அவர்கள் இருவரும் அவன் நினைத்த அளவு அவன் லட்சியத்திற்குக் குறுக்கே நிற்கவில்லை. |