இதை எண்ணிய பழனிக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. “இப்போது நாம் கோயமுத்தூருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். கோவைக்குப் போ என்று அப்பாதானே சொன்னார்? ஏன்? திருநெல்வேலி, திருச்சி, சென்னை என்று எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. அப்படியிருக்கக் கோவைக்குப் போ என்றது ஏன்?” பழனி யோசித்தான். ‘கோவைக்குப் போகிறாயா’ என்று அப்பா கேட்டார். பழனி ‘சரி’ என்றான். அப்போது அவர் முகம் ஏதோ மகிழ்ச்சியால் நிறைந்து மலர்ந்ததைப் போலத் திகழ்ந்ததைப் பழனி நினைத்தான். “ஒருவேளை கோவையில் என்னைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பாரோ? கோவையில் நான் எங்கே தங்குகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டால் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி என்னைப் பார்க்க வருவார்களே? வருபவர்கள் சும்மா போவார்களா? ஏதாவது பணம் தருவார்கள். வசதிகள் செய்து கொடுப்பார்கள். அப்புறம் என் சொந்த முயற்சிக்கு இடம் ஏது?” என்று நினைத்தான் பழனி. “கோவைக்குப் போ என்று அப்பா சாதாரணமாகச் சொன்னாரோ, எதாவது ஏற்பாடு செய்துவிட்டுச் சொன்னாரோ எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குச் சந்தேகம் வந்த பிறகு அந்த ஊருக்குப் போகக் கூடாது. நான் எந்த ஊரில் இருக்கிறேன் என்பது கூட அப்பாவுக்குத் தெரியக்கூடாது” என்று முடிவு செய்தான் பழனி. அப்படியானால் எங்கே செல்வது? பழனி யோசித்தான். தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னைக்குச் சென்றால் என்ன, என்று நினைத்தான். பிறகு சென்னைக்கே போக முடிவு செய்தான். திண்டுக்கல் வந்தது. பழனி இறங்கினான். பெட்டியிலிருந்த பர்ஸை எடுத்தான். திண்டுக்கல்லிலிருந்து சென்னைக்குப் போக டிக்கெட் வாங்கிக் கொண்டான். டிக்கெட்டைப் பர்ஸில் வைத்து, பர்ஸை கால்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான். பழனி ஏறி வந்த வண்டி |