என்ன பாடுபடும் என்பதை நான் சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்? மறக்காதே. ஒரு கடிதம் போடு. உன் அன்புத் தந்தை.” இதுதான் அந்த விளம்பரம், அதில் எந்தப் பேரும் ஊரும் இல்லை. சுந்தரேசர் தான் இந்த விளம்பரம் கொடுத்தார். பழனி கோவைக்கு வரவில்லை என்ற தந்தியைப் பார்த்ததும் திகைத்தார். பழனி எங்கே போனான் என்று எப்படி கண்டுபிடிப்பது? யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவின்படி தான் மேலே பார்த்த விளம்பரத்தை எல்லாச் செய்தித்தாள்களிலும் வெளியிட்டார். அது, மதுரையில் நடந்த திருட்டைப் பற்றிய செய்தி இருந்த பக்கத்தில் இருந்தது. அந்த விளம்பரத்தைக் கண்டு தான் பழனி கண்கலங்கினான். காளி புத்திசாலி. பழனியின் கண் சென்ற இடத்தைக் கண்டு கொண்டான். விளம்பரத்தையும் படித்தான். அந்த விளம்பரம் சொல்லும் மகன் ஒருவேளை பழனியாகவும் இருக்கலாமல்லவா? இல்லையென்றால் அவன் ஏன் அழ வேண்டும்? சந்தேகமில்லை. விளம்பரத்திற்கும் பழனிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. காளி இப்படி முடிவு செய்தான். பழனியை ஒன்றும் கேட்காமல் சற்று நேரம் இருந்தான். பழனி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். “காளி ஏன் அழுகிறாய் என்று கேட்டானே, என்ன பதில் சொல்வது? உண்மையைச் சொல்வதா? வேண்டாமா?” பழனி யோசித்தான். “பழனி எனக்குத் திடீரென்று ஒரு சின்ன கதை ஞாபகம் வருகிறது. சொல்லட்டுமா?” என்று கேட்டான். “சொல்லேன்” என்றான் பழனி. காளி கதை சொன்னான். “ஒரு ஊரில் ஒரு தாய் இருந்தாள். அவளுக்கு ஒரே ஒரு மகன். தாய்க்கு மகன் என்றால் உயிர். அவனுக்காகத் தன் |