பக்கம் எண் :

சிறுவர் நாவல்51

விழுந்தான். அவன் கையில் தாமரை மொட்டுப்போல இருந்த இதயம்
தரையில் மோதிச் சிதறிவிட்டது. கீழே விழுந்த மகன், நண்பனுக்குக்
காட்டுமுன் இதயம் உடைந்துவிட்டதே என்ற நினைத்தான். அப்போது தாயின்
இதயம் அவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டது. என்ன கேட்டது
தெரியுமா?”


     காளி இப்படிக் கேட்டான். பழனி, “என்ன கேட்டது? சொல் காளி
சொல்” என்று துடித்துக் கேட்டான்.


     காளி சொன்னான்.


     “பழனி அந்தத் தாயின் இதயம் மகனைப் பார்த்து மகனே கீழே
விழுந்தாயே, ஏதாவது அடிப்பட்டதா? என்று கேட்டது.”


     காளி சொல்லி முடித்தான். பழனி குலுங்கி அழுது விட்டான்.


     “பெற்ற மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு. இல்லையா பழனி” என்று
கேட்டான் காளி.


     பழனி கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். “ஒப்புயர்வற்ற இந்தத்
தெய்வத்தாயின் கதையை என்னிடம் எதற்காகச் சொன்னாய் காளி” என்று
கேட்டான்.


     “இதைக்கேட்ட பிறகாவது உன் கல் மனம் கரைந்து உங்கள் வீட்டுக்குக்
கடிதம் எழுதமாட்டாயா? அதற்காகத்தான் சொன்னேன்” என்றான் காளி.


     பழனி காளியைப் பார்த்தான். தான் அழுத காரணம் அவனுக்குத்
தெரிந்து விட்டதோ என்று நினைத்தான். அதற்குள் காளி, “பழனி நீ
பத்திரிகையில் நான் சொன்ன விஷயத்தைப் பார்க்கவில்லை. மகனுக்கு அப்பா
எழுதிய கடிதத்தைப் படித்துக் கண்ணீர் விட்டாய். இதை நான்
புரிந்துகொண்டேன். உடனே உன் வீட்டுக்கு ஒரு கடிதம் எழுது” என்று
சொன்னான்.


     பழனி ‘சரி’ என்று தலையசைத்தான்.