காளி ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக் கொடுத்தான் பழனி தன் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து பேனாவை எடுத்தான். கடிதம் எழுத முற்பட்டான். ஆனால் எழுதவில்லை. “ஏன் பழனி தயங்குகிறாய்? கடிதத்தின் கவரில் நீ எழுதும் முகவரியைப் பார்த்து உன் ஊரையும் பெற்றோரையும் தெரிந்து கொள்வேன் என்றா? அந்தச் சந்தேகம் உனக்கு வேண்டாம். நான் இப்போதே வெளியே போகிறேன். நீ கடிதம் எழுதித் தபாலில் சேர்த்து விடு” என்று சொல்லிக் கொண்டே காளி எழுவதற்கு முயன்றான். பழனி அவனைத் தடுத்தான். “இல்லை காளி, அதனால் நான் தயங்கவில்லை. நான் எந்த ஊரில் இருக்கிறேன் என்பதே என் அப்பாவுக்குத் தெரியக்கூடாது. இந்தக் கடிதத்தில் நான் ஊர் பெயர் எழுதாமல் விட்டுவிடலாம். ஆனால் தபால் முத்திரையில் ஊர் பேர் இருக்குமே என்று யோசிக்கிறேன். நான் இருக்கும் ஊர் தெரிந்தால், ஊரில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அப்புறம் என்ன நடக்குமோ? அதனால்தான் காளி கடிதம் எழுதத் தயங்குகிறேன்” என்றான் பழனி. “பழனி உன் கடிதத்தைப் பார்த்து நீ சென்னையில் இருக்கிறாய் என்பதை உன் அப்பா தெரிந்து கொள்ளக் கூடாது. அவ்வளவுதானே! அதற்கு நான் வழி செய்கிறேன்” என்றான் காளி. “எப்படி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்” என்று கேட்டான் பழனி. “என் முதலாளி அதுதான் பத்திரிகைக் கடைக்கும் பழைய பேப்பர் கடைக்கும் இந்த வீட்டுக்கும் சொந்தக்காரர், இன்றிரவு திருச்சிக்குப் போகிறார். அவரிடம் உன் கடிதத்தைக் கொடுத்து அனுப்புகிறேன். அவர் அதைத் திருச்சியில் தபாலில் சேர்ப்பார். உன் அப்பா, நீ திருச்சியில் இருப்பதாக நினைப்பார். எப்படி என் யோசனை?” |