காளி கேட்டான். பழனி “பிரமாதம்” என்றான். உடனே பழனி, “அன்புள்ள அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வணக்கம்” என்று ஆரம்பித்துக் கடிதம் எழுதினான். தான் சுகமாக இருப்பதாகவும் தன்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் அடுத்த மே மாதம் உறுதியாகத் திரும்பி வருவதாகவும் விளக்கமாக எழுதினான். அவன் எழுதிக் கொண்டிருந்தபோதே வெளியே சென்ற காளி, ஒரு கவருடன் திரும்பினான். கவரில் முகவரி எழுதவேண்டும். பழனி யோசித்தான். “காளியின் முதலாளி திருச்சிக்காரர் போலிருக்கிறது. அவர் சுந்தரேசர் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால், என் கவரைப் பார்த்தும் நான் பெரிய பணக்காரனின் மகன் என்பது தெரிந்துவிடுமே! அப்புறம் அவர், அப்பாவுக்கே உண்மையை எழுதிவிடலாம் அல்லது எனக்குச் சலுகை தரக்கூடும். அப்படியெல்லாம் நேரவிடக்கூடாது.” பழனி இந்த முடிவுக்கு வந்ததும் வேறொரு வெள்ளைத்தாள் எடுத்தான். அதில் “அன்புள்ள நண்பன் அழகனுக்கு வணக்கம். நான் நலமாக இருக்கிறேன். நாகனுடன் எந்தக் காரணத்திற்காவும் சண்டை போடாதே. நான் ஏன் மதுரையை விட்டுச் சென்றேன் என்பதை மற்றவரிடம் சொல்லமாட்டாய் என்று நம்புகிறேன். எனக்காக ஒரு சிறிய வேலை செய்கிறாயா? இத்துடன் உள்ள கடிதத்தை அப்பாவிடம் சேர்த்துவிடு. பிற பின்னர். அன்புள்ள பழனி” என்று எழுதினான். பிறகு இரண்டு கடிதங்களையும் கவரில் வைத்தான். மேலே அழகனின் முகவரியை எழுதினான். அதைக் காளியிடம் கொடுத்தான். காளி கவரில் இருந்த முகவரியைப் படித்தான். “பழனி மதுரையைச் சேர்ந்தவனா” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். “சரி பழனி. இப்போதே போய் இதை என் முதலாளியிடம் கொடுத்துத் திருச்சியில் தபாலில் சேர்க்கச் சொல்கிறேன். அப்படியே பழைய பேப்பர் வாங்கும் வேலைக்குப் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டான் காளி. |