பக்கம் எண் :

54காளித்தம்பியின் கதை

     அவன் புறப்பட்ட பிறகு பழனியும் புறப்பட்டான். அறையை மூடிப்
பூட்டிவிட்டு வெளியே சென்றான். அறைக்கு இரண்டு சாவிகள். ஒன்று தான்
வைத்துக் கொண்டு, மற்றொன்றைப் பழனியிடம் கொடுத்திருந்தான் காளி.
அதனால் பழனி விரும்பியபோது வரவும் போகவும் வசதியிருந்தது. பழனி
வேலை தேடுவதற்காகச் சென்றான்.


     வேலை அவன் நினைத்ததுபோல் எளிதில் கிடைக்கவில்லை. காளியிடம்
கடன் வாங்கித்தான் மூன்று நாளாகச் சாப்பிட்டு வந்தான். பணம் அதிகம்
செலவாகக் கூடாதல்லவா? அதனால் காலையிலும் மாலையிலும் சிற்றுண்டி
சாப்பிடுவதை அன்று முதல் நிறுத்திவிட்டான். கடன் ஏறிக் கொண்டே
போனால் தீர்க்க முடியுமா?


     மேலும் இரண்டு நாட்கள் கழிந்தன. அன்றிரவு பழனி சாப்பாடு
சாப்பிடவில்லை. அதற்கு இரண்டு ரூபாய் அல்லவா செலவாகிறது? சூளையில்
ஒரு வீட்டில் இரவில் இட்டலி சுட்டு விற்கிறார்கள். பழனி ஒரு ரூபாய்க்கு
நான்கு இட்டலிகள் சாப்பிட்டு விட்டு அறையில் படுத்துக்கொண்டிருந்தான்.
சற்று நேரம் பொறுத்து காளி வந்தான்.


     “பழனி இன்று முதல் இரவில் சாப்பாடு வேண்டாம் என்று பாட்டியிடம்
சொல்லி விட்டாயாமே, ஏன்? ஏதாவது சாப்பிட்டாயா, இல்லை
பட்டினிதானா?”


     காளி கேட்டான்.


     “காளி, சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே வந்தால் என்ன பயன்?
அதனால் இரவு சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டேன். ஒரு ரூபாய்க்கு
இட்டலி சாப்பிட்டேன். அதுவே போதும்” என்றான் பழனி.


     காளி வருந்தினான். “இன்றைக்கும் உனக்கு வேலை
கிடைக்கவில்லையா” என்று கேட்டான்.


     “கிடைக்கவில்லை, காளி! ஐந்து நாளாக அலைகிறேன். எனக்கு
வேலையே கிடைக்கவில்லையே. உனக்கு எப்படி இத்தனை வேலைகள்
கிடைத்தன!”