6 காளி கண்டு அதிசயப்படும்படி பழனி என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா? பஸ் ஸ்டாண்டை ஒட்டிய ஓட்டலின் முன்னே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களைத் துடைத்துக்கொண்டிருந்தான். காளியின் முகத்தில் புன்சிரிப்புத் தவழ்ந்தது. அவன் அருகே சென்றான். ‘பழனி’ என்று அன்பும் ஆர்வமும் பொங்க அழைத்தான். சைக்கிள் சக்கரத்தைத் துடைத்துக் கொண்டிருந்த பழனி திரும்பிப் பார்த்தான். எதிரே காளியிருந்தான். “காளி, வேலையில்லை என்று வருத்தப்பட்டேன். உன் கதை எனக்கு உதவியது. இப்போது வேலை செய்கிறேன் இது காளி காட்டிய வழி” என்ற பழனி பையிலே கையைவிட்டு இருந்த சில்லறைகளை வெளியே எடுத்தான். “இதோ பார் காளி. எனது முதல் வருமானம்” என்று காளியிடம் காட்டினான். அந்தக் கையில் இரண்டு ரூபாய் இருந்தது. பழனி அதை இரண்டு ரூபாயாகவா மதித்தான்? இல்லை அது அவனுக்கு இருபது ரூபாய், இல்லை இருபதாயிரம் ரூபாய். இல்லை இல்லை! அதற்கும் மேலே! ஒவ்வொரு காசும் அவன் உழைப்பால் பெற்றதல்லவா? |