காளி அந்தக் காசை பெருமையோடு பார்த்தான். பிறகு “பழனி இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நீ காலையில் ஏதாவது சாப்பிட்டாயா?” என்று தாயன்போடு கேட்டான் காளி. பழனி, “இல்லை” என்றான். அதற்குள் ஓட்டலிலிருந்து சைக்கிள்காரர் ஒருவர் வெளியே வந்தார். அதைப் பார்த்த பழனி “காளி அப்புறம் பேசலாம். பேசிக்கொண்டே இருந்தால் வேலை என்னாவது?” என்று சொல்லிவிட்டு வருபவரின் சைக்கிளை, சைக்கிள் வரிசையிலிருந்து தனியே எடுத்துக் கொடுத்தான். சைக்கிள்காரர் கொடுத்த காசை வாங்கிக் கொண்டான். காளி, “முதலில் ஏதாவது சாப்பிடு. வயிறு நிறைந்தால்தான் கை உழைக்கும்” என்று சொல்லி விட்டுப் பேப்பர் கடைக்குச் சென்றான். பழனி அன்று ஐந்து ரூபாய் சம்பாதித்தான். அன்று முதல் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஓட்டலின் முன்பு சைக்கிள் துடைப்பதையே தொழிலாகக்கொண்டான். தினமும் நான்கு ஐந்து ரூபாய்க்குக் குறையாமல் கிடைத்தது. ஒருநாள் பகல்! காளி தான் வாங்கிக்கொண்டுவந்த பழைய பத்திரிகைகளைக் கடையில் கொடுத்துவிட்டு அறைக்கு வந்தான். அறையில் பழனி இருந்தான். அவன் ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். காளி வந்ததும் சாய்ந்து படுத்துக் கொண்டான். பழனி எழுதுவதிலேயே முனைந்திருந்தான். “பழனி என்ன எழுதுகிறாய்? இப்படிப் பக்கம் பக்கமாக எழுதுகிறாயே?” என்று கேட்டான் காளி. பழனி எழுதுவதை நிறுத்திவிட்டு, “கதை" என்றான். “கதையா? என்ன கதை? ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பப் போகிறாயா?” காளி கேட்டான். பழனி கதையின் கடைசி வரியை எழுதி முடித்து விட்டுப் பதில் கொன்னான். |