பக்கம் எண் :

62காளித்தம்பியின் கதை

     “காளி இது உண்மையில் நடந்ததுதான். கதையாக எழுதியிருக்கிறேன்.
கதையின் பெயர் என்ன தெரியுமா? பிச்சைக் காசு”.


     “பிச்சைக் காசா?”


     “ஆமாம். இதன் கதாநாயகன் யார் தெரியுமா? நீ தான்”


     “நானா?”


     “ஆமாம் நீ தான். ஆனால் காளியப்பன் என்ற பெயரைச்
சோலையப்பன் ஆக்கிவிட்டேன். படித்துப் பார்” என்று பழனி எழுதிய
கதையைக் காளியிடம் கொடுத்தான்.


     செய்தித்தாள்களின் போஸ்டர்களைக் காளி அறையில் வைத்திருந்தான்.
அதில் ஒருபுறம் அச்சடித்திருந்தது. மறுபுறம் ஒன்றுமில்லை. அந்தப்
போஸ்டரைக் கிழித்து அதில்தான் கதை எழுதியிருந்தான் பழனி.


     காளி கதையைப் படித்தான். காளி சாக்கடையில் பிச்சை எடுப்பதில்லை
என்று சபதம் செய்தானே அதே நிகழ்ச்சிதான் அந்தக் கதை. ஆனால்,
மிகமிகச் சுவையாக இருந்தது. காளி “சபாஷ்” போட்டான். “பழனி கதை
நன்றாக இருக்கிறது. ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பு” என்றான்.


     “மல்லிகை என்ற சிறுவர் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று
இருக்கிறேன்” என்றான் பழனி.


     “நல்லது அப்படியே செய்; ஆனால், செய்ய வேண்டும் என்று
நினைப்பதைவிட உடனே செய். ஒத்திப் போடாதே” என்றான் காளி.


     பழனி அன்றே அந்தக் கதையை மல்லிகை இதழுக்கு அனுப்பி
வைத்தான். கதை எழுதியவரின் பெயர் என்ன தெரியுமா? ‘காளித்தம்பி’.
இந்தப் பெயரைத் தன் புனை பெயராகக் கொண்டான் பழனி. அது பழனிக்குப்
புனை பெயராகத் தோன்றவில்லை. புனிதம் நிறைந்த பெயராகத் தோன்றியது.
அன்பும் பண்பும் அரிய உழைப்பும் ஒன்று சேர்ந்த காளிக்குத் தம்பி
என்றாலே அதிலே பெருமைதானே?