மே மாதம் வேகமாகச் சென்றது. அது மேமாதத்தின் மூன்றாம் வாரம். ஜு ன் பிறந்தால் பள்ளிக்கூடங்கள் திறப்பார்கள். பழனி பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டாமா? அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் பழனிக்கு வேறு ஒரு வேலை கிடைத்தது. அது காளி செய்வதைப்போல மாடிவீடு ஒன்றில் தண்ணீர் பம்பு அடிப்பது. மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னார்கள். “பழனி பம்பு அடிப்பது எளிதல்ல; உனக்கு அந்த வேலை வேண்டாம்” என்றான் காளி. பழனி அதை அப்போது கேட்கவில்லை. பம்பு அடிக்கும்போதுதான் அதை உணர்ந்தான். முதல் நாளே வேலையே அரைகுறையாக விட்டு விட மனமில்லை. பழனி கஷ்டப்பட்டு அடித்தான். அவன் கை ஓய்ந்துவிட்டது. ஒருவழியாக வேலையை முடித்துவிட்டு வந்தான். அவனுடைய கைகள் அறுந்து விழுந்துவிட்டனவோ என்ற ஐயம் தோன்றியது. கையைத் தூக்க முடியவில்லை. அசைக்க முடியவில்லை. அறையின் பூட்டைத் திறக்கவே சிரமப்பட்டான். திறந்ததும் அறைக்குள்ளே போய் விழுந்தான் கைவலி பொறுக்க முடியவில்லை. சைக்கிள் துடைக்கும் வேலைக்குப் போகவும் முடியவில்லை. “இந்த வேலையைக் காளி எப்படித்தான் செய்கிறானோ?” பழனி அந்தத் துன்பத்திலும் ஆச்சரியப்பட்டான். அன்றெல்லாம் அந்த வலி போகவில்லை. காளி தைலம் வாங்கிக்கொண்டுவந்து கைகளில் தேய்த்தான். வெந்நீர் ஒற்றடம் கொடுத்தான். வலி ஓரளவு குறைந்தது. “பழனி உனக்கு இந்த வேலை வேண்டாம். இதை விட்டுவிடு” என்றான் காளி. “விட்டால் முடியுமா? பள்ளியில் படிக்க வேண்டுமே? புத்தகங்கள் வாங்க வேண்டுமே? இதற்கெல்லாம் பணம் வேண்டாமா? பழகினால் சரியாகிவிடும் இல்லையா?” “பழனி நீ தெரியாமல் பேசகிறாய். பம்பு அடிப்பது சுலபமல்ல; அதனால் இதயம் கெடுவதாகக்கூட ஒருவர் |